சென்னை:அறுவடை நேரத்தில் பருவ மழை கொட்டி தீர்த்து வருவதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ சாகுபடி முக்கியமானது. இந்த பருவத்தில், 12 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடப்பது வழக்கம். நடப்பு சம்பா பருவத்தில், 13 லட்சம் ஏக்கர் வரை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பின், படிப்படியாக அறுவடை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டிசம்பரில் கொட்டி தீர்த்த மழையால், நான்கு லட்சம் ஏக்கருக்கு மேலான பயிர்கள் பாதித்துள்ளன.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மாநில அரசு சார்பில், நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக, மீண்டும் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால், தஞ்சாவூரில், 80 ஆயிரம் ஏக்கர், திருவாரூரில், 40 ஆயிரம், கடலுாரில், 50 ஆயிரம், நாகப்பட்டினத்தில், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கியுள்ளன. வேளாண் துறையினர் நடத்திய கள ஆய்வில், இத்தகவல் தெரிய வந்துள்ளது.அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள், நீரில் மூழ்கியுள்ளதால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. மழை பெய்து கெடுப்பதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE