உடுமலை : உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை, 24 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பும் நிலையில் உள்ளதால், பாலாற்றின் கரையிலுள்ள, தமிழக, கேரளா மாநில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணை, பி.ஏ.பி.,திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்று. நேற்றுமுன்தினம் இரவு முதல், மேற்கு தொடர்ச்சிமலையில், கனமழை பெய்து, திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று மாலை, மொத்தமுள்ள, 60 அடியில், 58.45 அடி நீர் மட்டமும், நீர் இருப்பு, 1,868 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, எந்நேரமும் அணை நிரம்பும் சூழல் ஏற்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படும். இதனால், பாலாற்றின் கரையோரத்திலுள்ள, மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை, 1997ம் ஆண்டு, நிரம்பி, பிரதான மதகுகள் திறக்கப்பட்டு, பாலாற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 24 ஆண்டுக்கு பின், தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'மேற்கு நோக்கி பாயும் பாலாறு, தேவனுார்புதுார், அர்த்தநாரிபாளையம், அம்பராம்பாளையம் வழியாக கேரளா மாநிலம் பாரதபுழா ஆற்றுடன் இணைகிறது. இதனால், இரு மாநில வழியோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE