பெண்ணாடம்:பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெய்த தொடர் மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கடலுார் மாவட்டத்தில், சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. ஏரி, குளங்கள் நிரம்பிய நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், பெண்ணாடம் அய்யனார் கோவில் தெரு அருகே, வெலிங்டன் பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பொதுப்பணித் துறை சார்பில், பொக்லைன் மூலம் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, வெள்ள நீர் அகற்றப்பட்டது. கன மழையால், வயல்களில் தண்ணீர் தேங்கி, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் மூழ்கின. சவுந்திரசோழபுரத்தில் பல இடங்களில், நெற்கதிர்கள் முளைப்பு விட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வடகரை - நந்திமங்கலம் இடையே சின்னாத்துார் வாரி ஓடை; தீவளூர் - சாத்துக்கூடல் இடையே பழவாறு ஓடை மற்றும் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, தற்காலிக செம்மண் சாலை உடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால், 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பொங்கல் பண்டிகைக்கு அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாமல், சிரமம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE