ஓசூர்:பணியின் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த எஸ்.ஐ., 10 மாதங்களாக, 'கோமா' நிலையில் உள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்தவர் பாலாஜி, 55; கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச், 19 இரவு, 11:30 மணிக்கு, பேரிகை - மாஸ்தி சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அதிவேகமாக வந்த ஸ்பிளண்டர் பைக், அவர் மீது மோதியதில், தலையில் பலத்த காயமடைந்தார்.
அவரை, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 10 மாதங்களாக கோமா நிலையிலேயே உள்ளார். இதுவரை மருத்துவ செலவு, 95 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.அந்த மருத்துவமனையில், எந்த மருத்துவ காப்பீடும் ஏற்றுக் கொள்ளப்படாததால், தமிழக அரசு உதவும் என்ற நம்பிக்கையில், பாலாஜியின் மனைவி சித்ரா, 46 மற்றும் குடும்பத்தினர், உறவினர்களிடம், கடன் வாங்கி செலவழித்தனர்.
இதுவரை எந்த உதவியும் வராத நிலையில், உறவினர்கள், பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர். ஓசூர், சப் - டிவிஷன் போலீசார் சார்பில், மருத்துவ செலவுக்கு, 4.75 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மருத்துவ செலவுக்கு பணம் செலவழிக்க முடியாமல், அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
'பணியின்போது காயமடைந்த, தன் கணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவரது மனைவி கோரிக்கை வைத்துள்ளார். உதவ நினைப்பவர்கள், 97503 52494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE