ஆண்டிபட்டி:கேரள பகுதி மழை காரணமாக பெரியாறு அணைக்கும், தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வைகை அணைக்கு பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து ஏற்படும். நடப்பு பருவத்தில் வைகை அணைக்கு வந்த நீரால் அணை நீர்மட்டம் 62 அடி வரை உயர்ந்தது. இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய், ஆற்றின் வழியாக நீர் திறக்கப்பட்டது.
இதனால் நீர்மட்டம் 57 அடி வரை குறைந்தது. முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்பட்டு சில நாட்கள் அணையில் நீர் திறந்தும், சில நாட்கள் வெளியேற்றப்பட்டும் வந்தது. கடந்த சில நாட்களாக வருஷநாடு மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மூல வைகையில் இருந்து வினாடிக்கு 62 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 481 கன அடியாகவும், நேற்று மதியம் 2:00 மணிக்கு 1012 கன அடியாகவும் உயர்ந்தது. நேற்று முன்தினம் 61.25 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 62.11 அடியாக உயர்ந்தது.(மொத்த உயரம் 71 அடி). குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.
பெரியாறு அணை ஒரு அடி உயர்வு
மலைப்பகுதியில் மழை காரணமாக, பெரியாறு அணைக்கு 825 கன அடியாக இருந்த நீர்வரத்து 2315 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி வரை உயர்ந்து 122.25 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3074 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்பிடிப்பில் கன மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE