கோவை:தொழில்துறையினருக்காக, ஏழு அம்ச வாக்குறுதிகளை, மக்கள் நீதி மையம் தலைவர் கமல், கோவையில் வெளியிட்டார்.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தேர்தல் பரப்புரை செய்து வந்த கமல், நேற்று நிருபர்களை சந்தித்தபோது, தொழில்துறைக்காக, ஏழு அம்ச கொள்கைகளை வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது:பிரசாரத்துக்காக சென்ற போது, பேரெழுச்சியை பார்க்கிறோம். இத்தகைய எழுச்சியை இதற்கு முன் பார்க்கவில்லை. தொழில்துறைக்கான, ஏழு வாக்குறுதிகள் அளிக்கிறோம். விரிவான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம்.
* அறிவியல், தொழில்நுட்பங்கள், புதிய தொழில்முனைதல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அவற்றை நடைமுறை சாத்தியமாக்கவும், தொழில்துறை புரட்சி 4.0க்கு வித்திடுவதற்கு ஏதுவாகவும், புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக் கூறுகளுக்கான துறை எங்கள் அரசால் நிறுவப்படும்.
* முதல்வர் தலைமையில் அரசு, 'மதியுரைக்குழு' ஒன்றை நிறுவி, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு காலாண்டிலும், கலந்தாலோசனை கூட்டம் நடத்துவோம்.
* சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கத்தை, எங்கள் அரசு உறுதி செய்யும்.
* பெரிய தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகள் மற்றும் கிளை அலுவலகங்களை, வளர்ச்சி குறைந்த பகுதிகளில் அமைக்க ஊக்குவிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, நகர்ப்புறம் நோக்கி மக்கள் செல்வது கட்டுப்படுத்தப்படும்.
* அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டாய மற்றும் விரிவான காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் வேலை பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டு வருவதன் மூலம், முறைப்படுத்தப்படுவர்.
* மாவட்ட தலைநகரங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, புதிய திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்.
* புதிய தொழில்துறை முதலீடுகளில், முறையான காலக்கெடுவுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவோம். வணிக நிறுவனங்களின் தொழில் மேம்பாடு அடைய வழிவகை செய்யப்படும்.இவ்வாறு, கமல் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE