வி'தை'விடு வாழ்வின் உள்ளே
விழுபொருள் தைஉண் டாமே
பு'தை'யலே தேடிப் போகின்
பூத்திடும் தைஅதி லாமே
எ'தை'யுமே ஏகும் வாழ்வில்
எழுவது எழுத்தது தையே
உதயமாய் வருவதே தையாம்
உவந்துநாம் வரவேற் போமே
பொய்யிலா நிலையே நில்லும்
பொறுமையும் அறமும் வெல்லும்
வையமே அறியும் வண்ணம்
வாழ்வியல் இதுசொன் னாய்உன்
மையலில் மனது கொள்ள
மாதமாய் அழகாய்ப் பூத்தாய்
தையலே தையே வாழீ
தருவதாம் நலமே வாழீ
உழைப்பதில் உயர்வாய்ச்சொன்னார்
உழவெனும் தொழிலாம் அதனால்
தழைப்பது உலகம் என்னும்
தத்துவம் சொல்லும் தையே
பிழைப்பெனில் பயிர் வளர்க்கும்
பிழைப்(பு)அதே பெற்றம் வாழ்வில்
செழிப்பதிவ் வுல(கு)அத்தொழிலால்
சொல்லிடும் தையே வாழீ
எதிரியின் தலையை வீரன்
எடுத்தலோர் நாடு காக்கும்
கதிரினை அறுக்கும் தொழிலோ
குவலயம் முழுதுங் காக்கும்
பதரெனும் களைகள் நீக்கிப்
பயிரெனும் அறமே தேக்கிப்
புதிரெனும் வாழ்வே உய்யப்
பூத்தநற் பாவாய் வாழீ
-டாக்டர்.எஸ்.மீனாட்சி சுந்தரம்
மதுரை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE