சேவல்களின் ஆளுமையில் 'அசில்' இனம் தனித்துவம் மிக்கது. இதில் வண்ணங்களின் அடிப்படையில் வெள்ளை, காகம், மயில் என உள்ளது. இந்த வண்ணங்களிலும் உருவ வேறுபாட்டின் அடிப்படையில் பல நாட்டுச் சேவல்கள் வகை பிரிக்கப்படுகிறது.துவக்கத்தில் சண்டைக்கும், பெருமைக்காகவும் சேவல் வளர்க்கப்பட்டது. தற்போது நாட்டுச் சேவல்களின் வகைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அழியும் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் சேவல்களை சிலர் வளர்த்து வருகின்றனர். சண்டைக்கு மட்டுமின்றி வீடுகளில் ஒய்யார கொண்டையுடன், நீளமான வாலும் கொண்ட சேவல் அழகாக திரியும்.அசில் கோழிகள்அசில் இனத்தில் சண்டைச் சேவல்கள் பல வகைகள் உள்ளன. இவற்றை நன்கு பாராமரித்தால் 10 ஆண்டுகள் வாழும். தாய்க் கோழியின் ரோஷம், கோபம் முக்கியத்துவம் பெற்றது. அதன் சேவற் குஞ்சுகள் பறக்கும் உயரத்தை பொறுத்து தரம் நிர்ணயிக்கப்படுகிறது.குறைந்தபட்சம் 5 அடி உயரம் பறக்க வேண்டும். இக்கோழிகளின் முட்டை 15 வைத்தால் 10 முட்டைகள் வரை பொரித்து சேவலாக இருக்கும். குஞ்சுகளுக்கு ஆபத்து கீரி, கழுகு, பாம்புகளால்தான்.
தரமான சேவல்கள் 3 மாதத்தில் இருந்து அதன் ஆளுமையை மற்ற குஞ்சுகளிடம் வெளிப் படுத்தும். இயல்பாகவே வீரம் நிறைந்தவை அதன் வெற்றியால் சகோதர சேவல்களிடம் முன்னுரிமை பெறும். வெற்றி பெற்ற சேவலுக்கு மற்றவை கட்டுப்படும்.உணவு, இருப்பிடத்தில் மட்டுமின்றி தாய் கோழியின் உரிமையிலும் வெற்றி பெற்ற சேவலுக்கு முன்னுரிமை உண்டு. இந்த வகை சேவல்கள் ரூ.50 ஆயிரம் வரை விலை போகும். இவற்றுக்கு நீச்சல், சண்டை பயிற்சி அளிக்கப்படும். அவற்றில் பச்சைக்கால் வெள்ளை, மறுகால் காகம், மறுகால் கீரி, மயில் செங்கருப்பு, பட்டா கொண்டை நுாலான், பேய்கருப்பு உட்பட பல வகைகள் உள்ளது.
அசில் இனத்திலேயே அழகிற்கும், பெருமைக்கும், கவுரவத்திற்கும் வளர்க்க பட்டவை வால் சேவல்கள். இவை சண்டையிடாது. இவற்றை வளர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த இவற்றை தனி இடத்தில் மணலை பரப்பி வளர்க்க வேண்டும். இவை ரூ.2 லட்சம் வரை விலை போகும்.இவற்றில் கட்டமூக்கு வால் சேவல், கிளிமூக்கு வால், விசிறி வால், கிளிமூக்கு காகம், பொன்றம் கிளிமூக்கு வால் சேவல் என பலவகை உள்ளது. இவற்றின் பெருமையை பறைசாற்ற திருச்சி, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் கண்காட்சிகளும் நடைபெறுகிறது.
வெளிநாட்டில் இவ்வகையில் ஒரு கோழியே ரூ.10 லட்சம் வரை போகும்.கொண்டைகள் தரம்பிரிப்புசேவல் கொண்டைகளிலும் மத்து பூ, கத்தி பூ, பட்டா என வகைகள் உள்ளது. உணவுக்கான பிராய்லர் கோழி வளர்ப்பு பெருகியதால், பாரம்பரிய நாட்டு சேவல்கள் அடையாளமே தெரியாமல் மறைந்து கொண்டு வருகிறது.ஒட்டன்சத்திரம் தாலுகா தேவத்துாரில்சேவல்களை மூன்று தலைமுறைக்கும் மேலாக வளர்த்து வருகின்றனர். இங்கு சேவல்களை பாராமரிக்கும் பொறியியல் பட்டதாரி செல்வகுமார் கூறியதாவது: காலையில் எழுந்ததும் சேவல்களின் இருப்பிடத்தை சுத்தம் செய்து மாட்டு சாணம் தெளிக்க வேண்டும். இதனால் சேவல்களுக்கு பேன் தொல்லை வராது. கம்பு, மக்காச்சோளம், ராகி, கடலை மற்றும் ஒரு முறை புற்களை உணவாக தருவேன்.
சேவற்குஞ்சுகளுக்கு தரமுள்ள சத்து மாவு தயாரித்து தருகிறேன். என்னிடம் 50 சேவல்கள் உள்ளன. தினமும் ரூ.500 முதல் ரூ. 1000 வரை செலவாகும். ஒருங்கிணைந்த பண்ணை முறையில் விவசாயம் செய்கிறேன். பாரம்பரிய சேவல்களை வளர்த்து வருவதால் மனநிம்மதி கிடைக்கிறது. சேவல்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளேன்.நோய்களுக்கு மருந்து கொடுத்து விடுவேன். சேவல்களுடன் தினமும் 2 மணிநேரம் செலவிட்டால்தான் அந்த நாள் எனக்கு முழுமையடைந்ததாக இருக்கும், என்றார். இவருடன் 95850 37787ல் பேசலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE