முப்பதே வயதான ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார். குறுகிய காலத்தில் திரையுலகில் பதித்த முத்திரை ஏராளம். அண்மையில் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி, கேமராவிற்கு பெரிதும் கவனிக்கப்பட்ட, ‛மாறா' படத்தில் ஒளிப்பதிவை இருவர் செய்திருந்தனர். அதில் ஒருவர் கார்த்திக் முத்துக்குமார் . அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இவரது, ‛பிரியாணி' என்ற மலையாள படமும், ‛குதிரைவால்' என்ற தமிழ் படமும் தேர்வாகி உள்ளன. தினந்தோறும் கற்றுக்கொண்டு, புத்தம் புதிய நுணுக்கங்களை கேமராவில் பகுத்தி சாதிக்க துடிக்கும் இந்த ஒளி ஓவியர் வருங்கால தமிழ் திரையுலகின் நம்பிக்கை ஒளியாக தெரிகிறார். இவரோடு உரையாடிய போது...
எப்படி ஒளிப்பதிவாளர் ஆனீர்கள்
பள்ளி பருவத்திலேயே எழுத்து, நடிப்பு ஆர்வம் உண்டு. பி.எஸ்.சி., விஸ்காம் படித்து விட்டு ஒளிப்பதிவு துறையில் ஆர்வம் ஏற்பட்டு எல்.வி.பிரசாத் நிறுவனத்தில் பட்டமேற்படிப்பு டிப்ளமோ படித்தேன். அப்போது தான் எனக்கான உலகம் விரிந்தது. நிறைய உலகத்தரப்படங்கள் பார்த்தேன். குறும்படங்கள் எடுத்தேன். 35 எம்.எம்.,ல் நான் படம் பிடித்த டிப்ளமோவுக்கான குறும்படம் தேசிய அளவில் பெரிய வரவேற்பையும், விருதையும் பெற்று தந்தது.
இந்த படம் தான் சந்தோஷ் சிவனிடம் நான் பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. இதனால் மலையாள படங்களில் ஒளிப்பதிவு செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. 'அஸ்தமனம் வர'என்ற மலையாள படம் என் முதல் படம். 'மாறா'வுக்கு முன்பு ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளேன். பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான 'குதிரைவால்' பெரிதும் கவனிக்கப் பட்டு திரைப்பட விழாவிற்கும் தேர்வானது மகிழ்வான தருணம்.
உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர்கள்...
பாலுமகேந்திரா, சந்தோஷ் சிவன்.
ஒரு திரைப்படத்திற்கு காட்சியா, கதையா முக்கியம்
கதை தான் காட்சியை விவரிக்கிறது. ஒரு இமேஜ் ஒரு கதையை சொல்லும். எனவே காட்சி சிறப்பாக அமையவேண்டும் என்றால் கதை சிறப்பாக இருக்க வேண்டும். வார்த்தைகளை அடுக்கினால் மட்டும் சொற்றொடர் ஆகிவிடாது. கோர்வையாக வார்த்தைகள் வர வேண்டும். ஒரு சொற்றொடருக்கு வார்த்தைகள் போல, ஒவ்வொரு 'ஷாட்ஸ்'அமைய வேண்டும். நல்ல ஒளிப்பதிவிற்கு கரு முக்கியம். ஒரு கதையை பெருமைப் படுத்துவதாக ஒளிப்பதிவாளரின் பணி இருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் ஹீரோவுக்கா, கதைக்கா
ஹீரோ சொல்லும் கதை தான் முக்கியம். கதாநாயகன் என்றாலே கதையின் நாயகன் தான். கதை இல்லாமல் ஏது நாயகன். ஆனால் ஒரு கருத்தை யார் சொல்கிறார் என்பது முக்கியம்.
திரை உலகிற்கு வருபவர்களுக்கு இளைஞனாக உங்கள் அறிவுரை
அறிவுரை அல்ல; நான் கற்றதை சொல்கிறேன். இங்கு வந்தால் கற்றுக்கொள்ள யோசிக்க கூடாது. முன்பு வருடத்திற்கு ஒருமுறை டெக்னாலஜி 'அப்டேட்' ஆனது. இப்போது மூன்று மாதத்தில் எல்லாம் மாறிவிடுகிறது. கேமரா, லென்ஸ் கற்றுக்கொள்வது மட்டும் முக்கியம் அல்ல. நமது கலை அழகியலை எப்படி மெருகேற்றுகிறோம் என்பது முக்கியம். மக்களின் வாழ்க்கை தான் சினிமா. எனவே மனிதர்களை பற்றி படிக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
நல்ல ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகிறார்கள். நீங்களும் அடுத்து படம் இயக்குவீர்களா
நிறைய குறும்படங்கள் இயக்கியுள்ளேன். இயக்குனர் பணி தான் என் விருப்பமும். கல்லுாரியில் படிக்கும் போது, என் குறும்படங்களுக்கென்று தனியாக ஒளிப்பதிவாளர் வைக்க முடியாததால் நானே அதனையும் செய்தேன். அப்போது தான் ஒளிப்பதிவு துறையில் நிறைய கற்க ஆசை ஏற்பட்டது. இதனால் பட்டமேற்படிப்பில் திரைப்பட ஒளிப்பதிவை படித்தேன். எல்லா இயக்குனர்களும் ஒளிப்பதிவாளர்கள் தான்.
விஷூவலா கதை சொல்ல தான் இயக்குனர் சினிமாவிற்கு வருகிறார். அவர்கள் கதையை பார்க்க ஒளிப்பதிவாளர்கள் டெக்னிக்கலாக உதவுகிறார்கள். 'இயக்குனரின் கண்' தான் ஒளிப்பதிவாளர். இயக்குனர் ஆவது லட்சியம் என்று சொல்வதை விட அது எனது அடுத்த கட்டம், ஒரு 'பிராசஸ்'. ஒளிப்பதிவாளராகி விட்டு இயக்குவது என்பதை அடுத்த நிலையாக பார்க்கிறேன். பாலுமகேந்திரா, சந்தோஷ் சிவன் எனக்கு ஆச்சரியம் தந்த இயக்குனர்களும் கூட. சத்தியஜித்ரேயின் படங்கள் என்னில் புதுவெள்ளம் பாய்ச்சியது.
தமிழை விட மலையாளத்தில் யதார்த்தம் இருக்கிறது என்கிறார்களே...
காட்சிப்படுத்தலில் தமிழிற்கும் மலையாளத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதைக்கு தேவையுள்ளதாக ஒளிப்பதிவு இருக்க வேண்டும். கதையை விட்டு விலகி விடக்கூடாது. கதைகளும், இயக்குனர்கள் பார்வையும் தான் முக்கியம்.
மொட்டை மாடி காத்தாடிவாய் வலிக்க கரும்பு
நான் பிறந்து வளர்ந்தது சென்னை சவுகார்பேட்டை பகுதி. பொங்கலுக்கு மொட்டை மாடியில் காத்தாடி விடுவது, வாய் வலிக்க கரும்பு சாப்பிடுவது என்பது பள்ளிப்பருவ பொங்கல் நினைவுகள். வீட்டில் கரும்பு, மாவிலை தோரணம் கட்டுவது, வெள்ளைஅடிப்பது என பொங்கலுக்காக வீடும் சுற்றுப்புறமும் அழகாக மாறுவதே ஒரு இனிய அனுபவம்.
-ஜிவிஆர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE