''சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம். அதற்கு பெற்றோரும் முட்டுக்கட்டை போடவில்லை. சினிமா பார்த்து பார்த்து எல்லாத்தையும் நானே கத்துக்கிட்டேன். இன்று இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என 8 பிரிவுகளிலும் நானே வேலை செய்து படத்தை 'சக்சஸ் புல்'லாக முடித்து தியேட்டர்களில் வெளியிட்டு இருக்கிறேன். 'ஹவுஸ் புல்' ஆகாவிட்டாலும் மக்களிடம் நல்லா 'ரீச்'ஆகியிருப்பதை பார்க்கும்போது அரசு வேலையை விட்டுவிட்டு இத்தனை வருஷம் கஷ்டப்பட்டதற்கு கிடைத்த பலனாக கருதுகிறேன்'' என பெருமிதம் கொள்கிறார் ராமசுப்பிர மணியன் 44.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த இவர், தீயணைப்பு வீரராக பணியாற்றியவர். சினிமா மீதான காதலால் 7 ஆண்டுகளுக்கு முன் வேலையை மறந்துவிட்டு சினிமா நினைவாகவே இருக்க, வேலையை இழக்க நேரிட்டது. ஆனாலும் அசராமல் 'வாழ்த்துகிறேன்' என்ற படத்தை வெற்றிகரமாக முடித்து பலரது வாழ்த்துக்களை பெற்றிருக்கிறார். தினமலர் பொங்கல் மலருக்காக சந்தித்தோம்...
* சினிமா மீது காதல் எப்படி
சின்ன வயதில் எனக்குள் கதை ஆர்வம், இசை ஆர்வம், கேள்வி ஞானம் இருந்தது. சினிமாவில் ஏதாச்சும் சாதனை பண்ண வேண்டும் என்பதற்காக என்னையே அர்ப்பணித்து விட்டேன்.* பிறகு ஏன் தீயணைப்பு வீரர் ஆனீர்கள்இந்த வேலை கிடைக்கும் முன்பே சினிமாவில் சேர தனியார் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ இன் பிலிம் டெக்னாலஜி படித்தேன். அப்போதுதான் தீயணைப்பு துறையில் சேர வாய்ப்பு கிடைத்தது. நான் தயங்கினேன். ஆனால் பெற்றோர் வற்புறுத்தலால் 2002ல் பணியில் சேர்ந்தேன்.
* உங்கள் கனவுக்கு தீயணைப்பு பணி இடையூறாக இருந்ததா
இடையூறு என்று சொல்ல முடியாது. ஒரே நேரத்தில் இரு வேலைகளை பார்த்தால் சரியாக இருக்காது என்பதால், மருத்துவ விடுப்பு எடுத்து சினிமா மீது கவனம் செலுத்தினேன்.
* வீட்டில் சம்மதம் கிடைத்ததா
என் மனைவி, குடும்பம் எனக்கு கிடைத்த வரம். அவர்கள் என்னை நம்பினர். தீயணைப்பு துறையில் இருந்து வெளியே வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து சில தொழில்களை செய்தேன். அதில் கிடைத்த வருவாயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து படம் எடுக்க துணிந்தேன்.
* முதல் பட அனுபவம்
நண்பர்கள் ஆதரவுடன் நானே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்தேன். நண்பர் தான் ஹீரோ. சென்னைக்கு சென்று இசை கலைஞர்களை வரவழைத்து இசை அமைத்தேன். இப்படி திட்டமிட்டு வேலை செய்ததால் படத்தின் பட்ஜெட் ரூ.40 லட்சத்தில் முடிந்தது. சின்ன பட்ஜெட், புது நடிகர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம். கொரோனாவால் அது எனக்கு சாத்தியமானது. 12 தியேட்டர்களில் வெளியிட்டு இருக்கிறேன். ஓ.டி.டி., போன்ற தளங்களில் திரையிட சில மறைமுகமான 'டிமாண்ட்' வைத்தார்கள். அது நமக்கு சரிபட்டு வராது. தியேட்டரில் படம் பார்த்த மாதிரி இருக்காது என்பதால் துணிந்து வெளியிட்டேன்.
* 'வாழ்த்துகிறேன்' படத்தின் கதை
40 வயது திருமணம் ஆகாதவரின் ஒருதலைக்காதல்தான் கரு. அதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறேன்.
* அடுத்தது
தயாராக இரு கதைகள் வைத்துள்ளேன் என்கிறார் 'அஷ்டாவதானி' ராமசுப்பிரமணியன்.
இவரை வாழ்த்த 73389 15135
-ராம்ஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE