உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தன் உடல் நிலையை காரணம் காட்டி, 'அரசியலுக்கு வரப் போவதில்லை' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார். அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமலும், ஆர்வக் கோளாறாலும், அவரின் ரசிகர்கள், சென்னையில் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். ரஜினி ரசிகர்களின் இந்த செயலானது, ஏற்புடையதாக இல்லை. 'சிஸ்டம் சரியில்லை' என, ரஜினி சொன்னதும்; அரசியல் கட்சி துவக்க, தன் ரசிகர்களை தயார்படுத்தி வைத்திருந்ததும் உண்மை.

டிச., 31ம் தேதியன்று அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்றவர், அதற்காக, கட்சியின் பெயரை பதிவு செய்ய, டில்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு, தன் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவரையும் நியமித்தார். இதில் எதிலும், எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை. கட்சி துவக்கி, நாட்டின் சிஸ்டத்தை சீர் செய்வதற்கு, ரஜினியின் உடல் நிலை ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டதால், அவரால், அரசியலில் இறங்க முடியவில்லை. அதனால், தன் ரசிகர்களை, அவரவர் பணிகளை மேற்கொண்டு, குடும்பத்தை கவனிக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார். இதில் என்ன தவறு?

'ரஜினியின் ரசிகர்கள்' என்று பெருமையுடன் கூறிக் கொள்வது உண்மையானால், அவரின் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக, அவருக்கு அறிவுரையும், ஆலோசனையும் கூறி, அரசியல் கட்சி துவங்கியே ஆக வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது. உங்கள் மிரட்டலுக்கு பணிந்து, கட்சியை துவக்கி, பிரசாரம் செய்யப் போகும் வழியில், ஏதாவது எக்குத் தப்பாக நடந்து விட்டால், அதற்கு யார் பொறுப்பு?
கட்சி துவங்குவதைக் காட்டிலும், ரஜினி உயிருடன் இருப்பது முக்கியமல்லவா? ரஜினி ரசிகர்களே, உங்கள் ஆர்வக் கோளாறால், அவரின் உயிருக்கே உலை வைத்து விடாதீர்கள். ப்ளீஸ்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE