திருக்கனுார்: கொடாத்துார் ஏரி நீர் வடிகால் வாய்க்கால் துார் வாரும் பணி கால தாமதமாக பொதுப் பணித்துறை மூலம் துவங்கப்பட்டது. திருக்கனுார் அடுத்த கொடாத்துார் ஏரியை சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஏரியில் மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பினால், நிலங்களில் சூழ்ந்து விவசாயிகள் பாதித்ததனர். இதனால், கொடாத்துார் ஏரியில் தண்ணீர் நிரம்பினால், சங்கராபரணி ஆற்று பகுதிக்கு வெளியேற வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த வடிகால் வாய்க்கால் சில ஆண்டுகளாக துார் வாராமல் செடிகள் வளர்ந்து புதர்மண்டியது. சமீபத்தில் பெய்த தொடர் கனமழையில் கொடாத்துார் ஏரி முழுவதும் நிரம்பி, அருகில் அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் 500 ஏக்கர் பரப்பில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில், நெற்பயிர்கள் சேதமடைந்த பிறகு, ஏரியில் இருந்து சங்கராபரணி ஆற்றுப் பகுதிக்குச் செல்லும் வடிகால் வாய்க்கால் பகுதி துார் வாரும் பணியை பொதுப் பணித் துறையினர் துவக்கி உள்ளனர். வரும் காலங்களில் மழை பெய்து ஏரியில் தண்ணீர் நிரம்பினாலும், பயிர்கள் சேதமடையாது என தெரிவித்துள்ளனர்.இருப்பினும், தற்போது தொடர் மழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE