பெங்களூரு- 'நிர்பயா' திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட, 'பாதுகாப்பான நகர்' திட்டப்பணிகளின் முறைகேடு விவாதம் காரணமாக, இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, அரசு இடம் மாற்றியது. ஆனால், ஐ.எம்.ஏ., மோசடி வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி மீது, நடவடிக்கை எடுக்கும்படி, சி.பி.ஐ., சிபாரிசு செய்தும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியெழுந்துள்ளது.'பாதுகாப்பான நகர்' திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்படும் பணிகளில், பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை நடத்தும்படி கோரி, உள்துறை செயலராக இருந்த ரூபா, அன்றைய தலைமை செயலருக்கு, கடிதம் எழுதியிருந்தார். இதனால், ரூபா மற்றும் உயர் ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் நிம்பால்கர் இடையே, மோதல் வெடித்தது. ஒருவர் மீது மற்றொருவர், பரஸ்பரம் குற்றம் சாட்டினர். இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளான அரசு, இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் இடம் மாற்றியது.ஆனால் இதற்கு முன், ஐ.எம்.ஏ., நிதி நிறுவன மோசடி வழக்கில், கடும் குற்றச்சாட்டை எதிர்கொண்ட, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சி.பி.ஐ., சிபாரிசு செய்திருந்தது. ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன், என்ற கேள்வியெழுந்துள்ளது.ஐ.எம்.ஏ., மோசடி வழக்கில், அந்நிறுவன மோசடியை, மூடி மறைத்து, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அறிக்கை அளித்திருந்தது, சி.பி.ஐ., விசாரணையில், வெளிச்சத்துக்கு வந்தது.இது பற்றி சப் - இன்ஸ்பெக்டர் கவுரி சங்கர், இன்ஸ்பெக்டர் ரமேஷ், டி.எஸ்.பி., ஶ்ரீதர், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அஜய் ஹிலோரி, ஹேமந்த் நிம்பால்கர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, சி.பி.ஐ., சிபாரிசு செய்திருந்தது.கீழ்நிலை அதிகாரிகளை, பணியிடை நீக்கம் செய்த உள்துறை, உயர் ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் நிம்பால்கர் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், அரசு தலைமை செயலராக இருந்த, விஜய் பாஸ்கர், ஓய்வு பெற, இரண்டு நாட்களுக்கு முன், அவருக்கு ரூபா கடிதம் எழுதியது தெரிய வந்துள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:'பாதுகாப்பான நகர்' திட்டம் தொடர்பாக, சர்ச்சை எழுந்தவுடன், இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, அரசு இடம் மாற்றி, நடவடிக்கை எடுத்தது.இதற்கு முன்பே, ஐ.எம்.ஏ., மோசடி வழக்கு, வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வழக்கில் கடுமையான, குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, சி.பி.ஐ., சிபாரிசு செய்திருந்தது.அப்போது ஏன், உள்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.ஐ.எம்.ஏ., வழக்கில் ஹேமந்த் நிம்பால்கர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் தொடர்புள்ள அதிகாரிகள் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, ஊழியர், நிர்வாக மேம்பாட்டுத்துறைக்கு, அறிக்கையளிப்பதில், உள்துறை தோல்வியடைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE