பொங்கல் பண்டிகை மற்றும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளுக்கு இடையே, கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியது. 200 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், கோயம்பேடில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகைப்பொருட்கள் மார்க்கெட்டுகள், கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன. கோயம்பேடு மார்க்கெட்டில், பொங்கல் பண்டிகையின்போது, சிறப்பு சந்தை அமைப்பது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக, இம்முறை சிறப்பு சந்தை அமைக்கப்படவில்லை.இங்கு, தினமும், 300க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள், 200க்கும் மேற்பட்ட லாரிகளில் பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, 400க்கும் மேற்பட்ட லாரிகளில், காய்கறிகள் விற்பனைக்கு வந்தன.சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி, போட்டு காய்கறிகள், பழங்களை வாங்கி சென்றனர். காய்கறிகளுடன் பொங்கல் பண்டிகைக்கு தேவையான, மஞ்சள், இஞ்சி கொத்துக்கள், மொச்சை பயறு, சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகிழங்கு, ஆகியவையும் அதிகளவில் விற்பனையானது. இதேபோல, பழ மார்க்கெட்டில் விற்பனை களைக்கட்டியது. மளிகைபொருட்கள் மார்க்கெட்டிலும், பூ மார்க்கெட்டிலும் விற்பனை அனல்பறக்க நடந்தது.பூக்களில் விலை சற்று கூடுதலாக இருந்தது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, நேற்று ஒரே நாளில் மட்டும், 200 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்ததால், வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர்.கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலைகளில், நேற்று காலை முதல், கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.லாரி மற்றும் வாகனங்கள் வந்து செல்ல, முறையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை, வியாபாரிகள் தெரிவித்தனர்.மார்க்கெட் அங்காடி நிர்வாக குழு சார்பில், நேற்று போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய, 50 லாரிகளுக்கு, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கோரிக்கைகோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகுமார் கூறியதாவது:பொங்கல் பண்டிகையையொட்டி, காய்கறி, பழ விற்பனை, 120 -150 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது. அவற்றுடன் மளிகை மற்றும் பூக்கள் சேர்ந்து, மொத்தம், 200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.கடந்தாண்டை பொறுத்தவரை இது குறைவு. கடந்தாண்டு, 300 - 350 கோடி ரூபாய் வரை, வர்த்தகம் நடந்தது.இந்தாண்டு, 300 கோடி ரூபாய் வரை வர்த்தகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பகல், 12:00 மணிக்கு, மார்க்கெட் மூடப்பட வேண்டும் என, கட்டுப்பாடு இருப்பதால், எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை. வரும் நாட்களில், கெடுபிடிகளை அரசு தளர்த்த வேண்டும். இதுவே, வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.கரும்பு வரத்து அதிகரிப்புகரும்பு வியாபாரம் செய்ய, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சேர்ந்து, மார்க்கெட் பின்புறம் உள்ள, தனியார் காலி இடத்தை, ஐந்து நாட்கள் வாடகைக்கு எடுத்து, விற்பனை செய்கின்றனர்.நேற்று, 400 லாரி கரும்புகள் வந்த நிலையில், 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டுக் கரும்பு, 300 -- 350 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம், 500 ரூபாய் வரை விற்பனையானது. வரத்து அதிகரிப்பால், இன்று, 200 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது.அடாவடி வசூல்கோயம்பேடு மார்க்கெட்டில், போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற சில லாரி ஓட்டுனரிடம், மர்ம நபர் ஒருவர், அதிகாரி போர்வையில், தலா, 3,000 ரூபாய் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அங்காடி நிர்வாக குழு செக்யூரிட்டிகளும், லாரி ஓட்டுனர்களிடம், 300 -- 400 ரூபாய் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE