சென்னை; முகப்பேரில் உள்ள, 90 வயது புளிய மரத்தடியில், குழந்தைகளுடன், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். சென்னை, முகப்பேரில் உள்ளது, அம்பத்துார் அரசு தொடக்கப் பள்ளி. பள்ளி வளாகத்தினுள், பசுமை மாறாமல் புளிய மரம் ஒன்று, அகன்று விரிந்து பரந்து காணப்படுகிறது.இதன் காரணமாக, இந்த பள்ளிக்கே புளிய மரத்துப் பள்ளி என்றும் பெயர் உண்டு. ஒரு காலத்தில், இந்த புளிய மரத்தின் கீழ் தான், பள்ளி இயங்கிய தாகவும் சொல்வர்; காரணம், மரத்திற்கு வயது 90.இந்த மரத்தின் கீழ் தான், பள்ளிக் குழந்தைகளின் விளையாட்டு மைதானம். குழந்தைகள் குதுாகலமாக விளையாடுவதைப் பார்த்து, மரத்திற்கு நிறையவே சந்தோஷம்; அதேபோல், மரத்தின் கீழ் விளையாடுவதை நினைத்து குழந்தைகளுக்கும் ஏக சந்தோஷம்.இந்த மரத்தின் கீழ், ஒரு இன்ப நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.சென்னையில் உள்ள, தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள், இங்கு படிக்கும் ஏழை, எளிய மாணவ - மாணவியருக்கு, பொங்கலுக்காக புத்தாடை எடுத்துக் கொடுத்து, அவர்களுடன் கரும்பும் இனிப்பும் சாப்பிட்டு கொண்டாடினர்.இந்த சிறப்பு நிகழ்வில், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கியதுடன், அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.பள்ளிக் குழந்தைகள் யாழிசை, மகேஷ்வரி ஆகியோர், அருமையாக கவிதை பாடி மகிழ்வித்தனர்.இது போல, அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு, புத்தாடை கொடுத்து மகிழ்வது, அமைப்பிற்கு இது ஒன்பதாவது ஆண்டாகும்.பள்ளித் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.இத்தனை நிகழ்வையும், அமைதியாகவும் ஆனந்தமாகவும் பார்த்து தலையசைத்து மகிழ்ந்தது, அந்த புளிய மரம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE