அச்சு தொழிலில் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையில், ஓலை சுவடியின் பெருமையை மக்கள் அறியவும், திருவள்ளுவர் தினத்தில், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும், வடமாநில கட்டட பொறியாளர் ஜஸ்வந்த சிங், திருக்குறளை முறைப்படி ஓலை சுவடியில், எழுதி முடித்திருக்கிறார்.அம்பத்துார் அடுத்த முகப்பேர் கிழக்கு, திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் சிங், 58; கட்டடக்கலை பொறியாளர். அவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலம், ஒர்ஸாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாத்தா, 1938ல் தமிழகத்திற்கு குடும்பத்துடன் வந்தார்.அதன் பிறகு, அவர்களுக்கு தமிழகம் தாய் வீடானது. ஆண்டுக்கு, 10 மாதம் தமிழகத்திலும், இரண்டு மாதம் பஞ்சாபில் உள்ள சொந்த ஊரிலும் வசிப்பது குடும்ப வழக்கமாகி உள்ளது.தமிழகத்தில் வளர்ந்ததால், ஜஸ்வந்த் சிங், தமிழ் ஆர்வலரானார். மேலும், இயற்கையின் மீதும் தீராத காதல் கொண்டு, தன் வீட்டையே, மரம், செடி, கொடிகள் அடர்ந்த, மூலிகை தோட்டமாக மாற்றி அமைத்து வாழ்ந்து வருகிறார்.தன் வீட்டில் உள்ள பெரிய மாமரத்தின் மீது, 25 பேர் அமர்ந்து, விருந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு, அழகிய மர வீடும் கட்டி வைத்து, அசத்தி உள்ளார்.சென்னையில் படித்து வளர்ந்த அவர், அப்பாவை போலவே, கட்டடக்கலை பொறியாளராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், உலக பொதுமறையான திருக்குறளை, அதன் பொருள் அறிந்து, ஆழ்ந்து படிப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார்.அதன் விளைவாக, திருக்குறளை, தானும் ஓலை சுவடியில் எழுத விரும்பினார். அதை எப்படி எழுதுவது என்ற தகவல்களை அறிந்தார். 2019 ஜூனில், ஓலை சுவடி தயாரித்து, அதில், 1,330 குறளையும், எழுத்தாணி மூலம் தெளிவாக எழுதி முடித்துள்ளார்.அதை, திருவள்ளுவருக்கும், தமிழுக்கும் செய்யும் மரியாதையாக எண்ணி மகிழ்வதாக பெருமிதம் கொள்கிறார்.ஜஸ்வந்த் சிங் கூறியதாவது:உலக பொதுமறையான திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், அது தமிழருக்கானது மட்டுமல்ல. உலக மக்கள் அனைவருக்குமானது என்பதை, வள்ளுவர் உணர்த்தி இருக்கிறார்.அனைத்து குறளுமே, ஈரடியில், ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ளது. இது திருக்குறளுக்கும், அதை எழுதிய வள்ளுவருக்குமே உள்ள தனிச்சிறப்பு.மேலும், அரசியல், அறிவியல், மருத்துவம், வாழ்க்கை என, மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களும் உள்ளன.கடந்த, 1812ம் ஆண்டு, திருக்குறள், 'பிரின்டிங்' முறையில் அச்சடிக்கப்பட்டது. அதன் பிறகு ஓலைச்சுவடி முறை பயன்படுத்தப்படவில்லை. பிரின்டிங் மற்றும் டிஜிட்டல் பிரின்டிங் முறையை விட, ஓலை சுவடி பதிவு முறைக்கு ஆயுள் அதிகம். பொதுவாக, 600 முதல், 700 ஆண்டுகள் வரை, ஓலை சுவடியில் உள்ள தகவல்கள் அழியாது.ஓலை சுவடி எழுத வேண்டும் என்றால், ஆண் பனை மரத்தில் இருந்து, ஓலையை வெட்டி எடுத்து, அதை முறைப்படி பதப்படுத்தி, உலர்த்தி, 20 செ.மீ., நீளம், 3 செ.மீ., அகலத்திற்கு, வெட்டி பயன்படுத்த வேண்டும்.குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு பயிற்சி போல், ஓலை சுவடியை தயாரிக்கும் முறை, அதில் எழுதும் பயிற்சிகளை அளிக்க, அரசு முன் வர வேண்டும். மனிதனுக்கு, வேர் முதல், உச்சியில் உள்ள ஓலை வரை, முழுமையாக உதவும் பனை மரத்தை வளர்க்கும் ஆர்வம், அவர்களுக்கு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.மாமரத்தில் வள்ளுவர்!திருக்குறள் எழுதுவது மட்டுமின்றி, மரங்களில் திருவள்ளுவரின் ஓவியத்தை வரைவதிலும், ஜஸ்வந்த் சிங் ஆர்வம் கொண்டவர். தன் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி, இரண்டு மாதங்களில், தன் வீட்டில் உள்ள பெரிய மாமரத்தில், 2 அடி அகலம், 2.5 அடி நீளத்திற்கு, திருவள்ளுவரின் உருவத்தை, தத்ரூபமாக செதுக்கியுள்ளார்.ஆதங்கம்!காகித பிரின்டிங் முறை அறிமுகமானது முதல், கடந்த, 200 ஆண்டுகளில், முழுமையான ஓலை சுவடி தொகுப்பாக, ஜஸ்வந்த் சிங் எழுதிய, திருக்குறள் தயாரானது குறிப்பிடத்தக்கது.அதை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நேரத்தில், நம் நாட்டில் இருந்து, திருடு போன, ஓலைசுவடிகள் மீட்கப்பட வேண்டும் என ஆதங்கப்படுகிறார். விவசாயம், மருத்துவம், அறிவியல் என அனைத்து துறை குறித்தான, நம் ஓலை சுவடிகள், ஜெர்மன் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவை நமக்குரியவை, அவற்றை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE