சில சினிமாக்களில், கிராமங்களில் ஆற்றை கடக்க பரிசல் பயன்படுத்துவதையும், பரிசலிலேயே பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்வதை பார்த்திருக்கலாம்.
அந்த பரிசலின் இடத்தை டிராக்டர் பிடித்திருப்பது, வியப்பு தான். 'நிவர், புரெவி' புயல்களால் பெய்த மழையால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து வரும் வடகிழக்கு மழை, நீர் நிலைகளை நிரம்பி வழிந்தோட செய்து வருகிறது.புழல், செம்பரம்பாக்கம், பூண்டி சத்தியமூர்த்தி ஆகிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் நிறைந்து, உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. நந்தனம் காட்டுப் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், ஆரணி ஆற்றில் கலக்கிறது. இதனால், ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தரைப்பால சாலை நீரில் மூழ்கி, சேதம் அடைந்தது. இதனால், போக்குவரத்து பாதித்தது.ஊத்துக்கோட்டையில் இருந்து, 2 கி.மீ.,யில் உள்ள, சிட்ரபாக்கம் அணைக்கட்டில் அதிகளவு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.கொரோனா மற்றும் வெள்ளப் பெருக்கால், தொழில்கள் பாதித்த நிலையில், சிட்ரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தன் சமயோகித செயலால், டிராக்டரில் ஒரு கரையில் இருந்து, மறு கரைக்கு, பைக், மற்றும் ஆட்களை ஏற்றிச் செல்கிறார். இதற்காக ஒரு பைக்கிற்கு, 50 ரூபாய், ஒரு ஆளுக்கு 20 ரூபாய் என, வசூல் செய்து வருகிறார். இதை பயன்படுத்தி, பகுதிவாசிகள் இதில் பயணம் செய்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.
-நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE