லக்னோ: கலப்பு திருமணங்கள் செய்யும் ஜோடிகள் பற்றிய தகவல்களை பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு செய்ய வேண்டியது கட்டாயம் என விதி இருக்கும் நிலையில், அது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறப்பு திருமணங்கள் சட்டம் 1954-ன் படி கலப்பு திருமணங்கள் செய்பவர்கள் மாவட்ட திருமண அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வழங்க வேண்டும். அவர் அதன் நகலை அறிவிப்பு பலகையில் பொது மக்கள் பார்வையில் படும்படி ஒட்டுவார். திருமணம் செய்பவர்களின் சொந்த மாவட்ட அலுவலகத்திலும் இந்த அறிவிப்பு ஒட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் திருமணம் வயது, மனநிலை போன்ற விதிகளை மீறியிருந்தால் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் இந்து ஆணை திருமண செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறினார். ஆனால் அப்பெண்ணின் தந்தை திருமணம் தொடர்பாக பிரச்னை செய்துள்ளார். எனவே அப்பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மனுவில், சிறப்பு திருமண சட்டம் மூலம் எங்கள் திருமணத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கு 30 நாட்கள் அறிவிப்பு தேவைப்படுகிறது. அதன் மூலம் பெருமளவு ஆட்சேபனை உண்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் சவுதிரி ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், “இது போன்று அறிவிப்பு வெளியிடுவது அடிப்படை உரிமைகளான சுதந்திரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றின் மீது படையெடுப்பதாகும். மேலும் அது யாருடைய குறுக்கீடும் இல்லாமல் திருமணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான, தம்பதியினரின் சுதந்திரத்தையும் பாதிக்கும். எனவே கலப்பு திருமணம் செய்பவர்கள் அறிவிப்பை வெளியிடலாம் அல்லது வெளியிடக்கூடாது என்று எழுத்துப்பூர்வமாக திருமண அதிகாரிக்கு கோரிக்கை வைக்க முடியும்.” என்று கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE