ஈரோடு: பொங்கல் திருவிழாவையொட்டி மஞ்சள், கரும்பு விற்பனை களை கட்டியது,
இன்று சூரிய பொங்கல். இதற்காக பயன்படுத்தப்படும் மஞ்சள் கொத்து, செங்கரும்பு, பொங்கல் பானை, மற்றும் படையல் பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, நேதாஜி மார்கெட், மணிக்கூண்டு, காவிரி ரோடு, கொல்லம்பாளையம் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக முளைத்த கடைகளில், மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதியது. மஞ்சள் ஒரு கொத்து, 40 முதல், 60 ரூபாய், கரும்பு ஒரு ஜோடி, 120 முதல், 160 ரூபாய்க்கு விற்பனையானது. வண்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானை, 350 முதல், 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
* புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட், திரு.வி.க., கார்னர், பவானிசாகர் சாலை ஆகிய பகுதிகளில், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வாழைக்கன்று, கரும்பு, மாவிலை, பூமாலை, அரசாணிக்காய், அவரை உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பொங்கல் விழாவையொட்டி, சங்ககிரி, வைகுந்தம் பகுதிகளில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, சந்தையில் விற்பனைக்காக குவிக்கப்பட்டது. ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மாட்டு பொங்கலை முன்னிட்டு, கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறுகளை புதிதாக கட்டுவர். ஒரு கயிறு, 10 முதல், 60 ரூபாய் வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. சங்கராந்தி பொங்கலுக்கு பயன்படுத்தும், அவரை மொச்சைக்கும், அரசாணி காய்க்கும் கிராக்கி ஏற்பட்டது.
* கடந்த சில நாட்களாக, ஒரு கிலோ சம்பங்கி பூ, 60 முதல் 80 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டியில் நேற்று சம்பங்கி பூ விலை உயர்ந்து, ஒரு கிலோ, 140 ரூபாய்க்கு விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE