ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் எளிமையாக நடந்தது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் மார்கழி மாத, பாவை நோன்பு விழா கடந்த, 30 நாட்களாக நடந்து வந்தது. தினமும் அதிகாலை நேரத்தில், ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடியபடி, பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். விழா நிறைவு நாள் மற்றும் மார்கழி மாதத்தின் கடைசி நாளான நேற்று, ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் அதிகாலை நடந்தது. முன்னதாக, 4:30 மணிக்கு சுதர்சண யாகம் நடந்தது. தெடர்ந்து நம்பெருமாள், ஆண்டாள் தாயார் திருமண அலங்காரம், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடந்தன. கத்தரிப்பூ பட்டு உடுத்தி வந்த ஆண்டாள் தாயாருக்கு, வெண் பட்டுடுத்தி வந்த பெருமாள், மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து மலர் சரங்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், திருமண கோலத்தில் நம் பெருமாள் எழுந்தருளினார். கொரோனா கட்டுப்பாடு உள்ளதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை, 6:00 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அனுமதியில்லாததால், வழக்கமாக நடக்கும் திருக்கல்யாண மொய் எழுதுதல், தாம்பூலம் வழங்குதல், திருமண விருந்து படைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE