கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில், பொங்கல் பண்டிகைக்கான பொருட்களை நேற்று, மக்கள் மிக ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இன்று (ஜன., 14) காலை கிராமம் மற்றும் நகரங்களில் உள்ளவர்கள் சூரியனுக்கு பொங்கல் வைத்து, படைப்பது வழக்கம். இதற்காக, சேலம் சாலையில் வைத்திருந்த புதுப்பானையை, மக்கள் அதிகம் வாங்கிச் சென்றனர். ஒரு பானை, 120 முதல் 800 ரூபாய் வரை விற்பனை ஆனது. இதேபோல் காப்புக்கட்டு ஒன்று, 10 ரூபாய்க்கும், ஒரு ஜோடி மஞ்சள் கொத்து, 50 ரூபாய்க்கும், கரும்பு ஒரு ஜோடி, 120 ரூபாய்க்கும், ஒரு வாழைத்தார், 300 முதல், 600 ரூபாய் வரையும் விற்பனையானது. மேலும், கோலப்பொடி, வண்ணப்பொடிகள், புத்தாடைகள், பூக்கள் என பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதனால் நேற்று காலை முதல், கிருஷ்ணகிரி நகரின் பல சாலைகளில், போக்குவரத்து நெரிசலாக இருந்தது.
* தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது விவசாயம் செழிப்பாக உள்ளது. இதனால், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையொட்டி, கிராமப்புற மக்கள், கரும்பு, மஞ்சள்கொத்து, பானை உள்ளிட்டவைகள் வாங்க, அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
ஊர் திரும்பிய மக்கள்: அரூரில், கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், சந்தைமேடு, நான்குரோடு, கச்சேரிமேடு உள்ளிட்ட இடங்களில், செங்கரும்பு, மஞ்சள் கொத்து, காப்புக்கட்டு பூ ஆகியவை விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது. ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பில் முழு நீள கரும்பு வழங்கப்பட்டதால், கரும்பு அதிகளவில் விற்பனை ஆகவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால், அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE