திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கு, சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூடுவதை தடுக்க, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, எஸ்.பி., அரவிந்த் கூறினார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., அலுவலத்தில், போலீசார் பொங்கல் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து, எஸ்.பி., அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2020ம் ஆண்டுகளில், பதிவான, 37 கொலை வழக்குகளில், 35 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், 78 பேர் கைது செய்யப்பட்டனர், 24 ஆயிரத்து, 603 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 24 ஆயிரத்து, 507 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பொங்கல் பண்டிகைக்காக, சுற்றுலா தலங்களில் மக்கள் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை, சாத்தனூர் அணை, செண்பகத்தோப்பு அணை, மிருகண்டாநதி அணை, குப்பனத்தம் அணை ஆகிய பகுதிகளில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்கள் கூடுவதை தடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE