கரூர்: ஜன.,16 முதல் கொரோனா தடுப்பூசி பணி தொடங்கும் நிலையில், மாவட்டத்திற்கு, 7,800 தடுப்பூசிகள் வந்துள்ளன.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டு, இந்திய நிறுவனமான பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டிற்கு மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் தடுப்பூசியை வரும், 16 முதல், முன் களப் பணியாளர்களுக்கு போடப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், தனியார் மருத்துவமனை பணியாளர்கள் என மொத்தம், 6,188 முன்கள சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக, அவர்களில் விபரம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனை, வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், கஸ்தூரிபா நகர்நல ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய, ஐந்து இடங்களில், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென்று திருச்சி மண்டல தடுப்பூசி மருந்து கிடங்கில் இருந்து, 7,800 தடுப்பூசிகள் நேற்று கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் இயங்கி வரும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தடுப்பூசி மருந்து கிடங்கில், காதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ்குமார் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்கு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE