நாமக்கல்: நாமக்கல் அடுத்த வகுரம்பட்டி ஊராட்சியில், சுற்றுலாத்துறை சார்பில், பொங்கல் சுற்றுலா விழா, கொண்டாடப்பட்டது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். இந்த சுற்றுலா பொங்கல் விழாவில், வகுரம்பட்டியை சேர்ந்த பெண்கள், குடும்பம், குடும்பமாக, கோவில் மைதானத்தில், புதுப்பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார். அக்கிராமத்தில், கரும்பு, மஞ்சள் கொத்து, மாவிலை, வேப்பிலை, வாழை மரங்கள் மற்றும் அலங்கார தோரணங்களுடன், விழா கோலமாக காட்சியளித்தது. பொங்கல் சுற்றுலா விழாவில், தமிழக பாரம்பரிய கலாச்சார மஞ்சள் கொத்துகளுடன், புதிய மண்பானையில் பொங்கல் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. சுற்றுலாத்துறை சார்பில், தர்மபுரி ஸ்டாலின் ராஜா தலைமையில், பாரதி கிராமிய கலைக்குழுவினரின், கரகம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், புலி ஆட்டம், மாடு ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள். செங்கல்பட்டு மீனாட்சி ராகவன் தலைமையில், விநாயகா நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், சாக்கு ஒட்டம், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கல்லாங்கல், தாயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், வகுரம்பட்டி ஊராட்சி தலைவர் ராஜா ரகுமான், பி.டி.ஓ.,க்கள் தேன்மொழி, அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE