நாமக்கல்: 'தகுதிச் சான்று தர மறுப்பதால், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலங்களில், வரும், 18ல், எங்கள் வாகனங்களை ஒப்படைக்கிறோம்' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கை: கடந்த, டிச., 5ல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 27, காலை, 6:00 மணி முதல், காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தை, சம்மேளனம் அறிவித்தது. அதன் காரணமாக, தமிழக அரசு சார்பில், போக்குவரத்து ஆணையர், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு, நிர்வாகிகளுடன், 23ல், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் பேரில், வேக கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் பட்டை உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொண்டனர். அதையடுத்து, அன்றைய தினமே வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்தோம். இந்நிலையில், கடந்த, சில நாட்களாக, தமிழகத்தின் பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்காமல், லாரி உரிமையாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். வேக கட்டுப்பாட்டு கருவி புதுப்பித்தல், புதிய கருவி பொருத்துதல், 80 கி.மீ., குறைவான வேகம் செல்லும் என்பதற்கான சான்று போன்ற காரணங்களை கூறி, மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றனர். எனவே, தகுதியுடைய வாகனங்களுக்கு, தகுதிச்சான்றிதழ் தரமறுப்பதால், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், எங்களது வாகனங்களை வரும், 18ல் ஒப்படைக்கின்றோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE