நாமக்கல்: ''தஞ்சையில், தனியார் பஸ் மின்சார ஒயர் மீது உரசிய விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்,'' என, அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும், தடுப்பூசி வழங்கும் முகாம்கள் அமைப்பது குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்று, ஆலோசனை நடத்தினர்.
அதையடுத்து, அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் தடுப்பூசி அளிப்பது தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் கடைப்பிடிக்கப்பட்டு நடத்தப்படும். நாமக்கல் மாவட்டத்தில், ஏழு இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படும். அதற்கான முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சையில், தனியார் பஸ் மின் கம்பியில் உரசியதில், ஏற்பட்ட விபத்தில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பஸ் சென்ற சாலையில், சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, மழை பெய்ததால், மணல்திட்டு மீது பேருந்து ஏறி இறங்கியது. அதனால், கம்பி உரசியதில், மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தில், யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., அமைச்சர்கள், பா.ம.க., நிறுவனர், தலைவர் ஆகியோரிடையே நடந்த சந்திப்பு குறித்து, ஏற்கனவே ராமதாஸ் செய்தியை தெளிவாக, டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி பேசவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE