மதுரை: அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒரே மேடையில் இருந்து ரசித்தனர். அப்போது, ராகுல் பேசுகையில், தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது எனது கடமை என தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும், இன்று முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி, உலக அளவில் வரவேற்பை பெற்றது. இன்று, மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
வீரர்களுக்கு பரிசு
இதனை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், திமுக இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடியவாறே ரசித்தனர். ராகுலுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் வந்தனர். ஜல்லிக்கட்டு குறித்து போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு ராகுலும், உதயநிதியும் பரிசு வழங்கினர்.

இந்தியாவிற்கு அவசியம்
இந்த விழாவில் ராகுல் பேசியதாவது : தமிழர்களின் பாரம்பரியத்தை நேரில் கண்டு ரசிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜல்லிக்கட்டு விழா சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வு, கலாசாரம், வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன். தமிழ் மொழியும், கலாசாரமும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. தமிழை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கவே வந்துள்ளேன். தமிழக மக்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். தமிழக மக்களோடு நின்று, தமிழ் பண்பாட்டையும், வரலாற்றையும் காக்கும் கடமை எனக்கு உள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின்னர், மதுரை தென்பழஞ்சியில் நடந்த பொங்கல் விழாவில் ராகுல் கலந்து கொண்டார். இந்த விழாவில், பொது மக்களோடு அமர்ந்து உணவருந்தினார்.
விவசாயிகள் புறக்கணிப்பு
விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ராகுல் ; தமிழ் கலாசாரம் மிகவும் பாராட்டுதலுக்குரியது. தமிழ் கலாசாரத்தையும், தமிழ் உணர்வையும் அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஒரே நாடு, ஒரே மொழி கொள்கை தவறானது. மத்திய அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது. விவசாயிகளின் வளங்களை மத்திய அரசு தாரை வார்க்க பார்க்கிறது. விவசாயிகளே இந்தியாவின் முதுகெலும்பு. கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் எவ்வித உதவியும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்முறை
உதயநிதி பேசுகையில், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். மதுரை என்றாலே வீரம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்க முதல்முறையாக வந்துள்ளேன். தொடர்ந்து இனி வரும் ஒவ்வொரு ஆண்டுகளில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க வருவேன். விழாவினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி . இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE