புதுடில்லி: வரும் 16ம் தேதி கொரோனா தடுப்பூசிபோடும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக நிடி ஆயோக் அதிகாரி தெரிவித்துள்ளார். அன்றே 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ‛கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசியை அவசர காலங்களில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி போடும் பணி 16ம் தேதி துவங்க உள்ளது. முதலில், சுகாதார பணியாளர்கள் முன்கள பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்நிலையில், நிடி ஆயோக் அமைப்பின் விகே பால் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி போடும் பணியை வரும் 16ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதல்நாளில் 3 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. அன்று, ஒவ்வொரு மையங்களிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும். இது வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில், தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிக்கும்.
மாநில அரசுகளிடம் உள்ள சுகாதார பணியாளர்களின் விவரங்களுக்கு ஏற்ப தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதார பணியாளர்கள் பயப்பட வேண்டாம் என உறுதியளிக்கிறேன். அவர்கள் தான் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE