புதுடில்லி : வேளாண் சட்டம் குறித்து ஆய்வு செய்யவும், போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தவும் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து உறுப்பினர் ஒருவர் விலகியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, 40 நாட்களுக்கு மேலாக, டில்லி எல்லையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நடத்திய எட்டு சுற்று பேச்சிலும், சுமுக முடிவு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டம், பேரணிக்கு தடை விதிக்கக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கும், மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவும், விவசாயிகளுடன் பேசவும், நான்கு உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.
இதில், பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் பூபேந்தர் சிங் மான், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, தெற்காசியாவின் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரமோத் ஜோஷி, ஷேட்கெரி சங்கதனா அமைப்பின் தலைவர் அனில் கன்வட் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆனால், இந்த கமிட்டியை ஏற்க மறுத்த விவசாயிகள், குழுவில் இடம்பெற்றவர்கள் வேளாண் சட்டத்திற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டினார். அதில், கடந்த டிசம்பர் மாதம் மத்திய விவசாயத்துறை அமைச்சர் தோமரை சந்தித்த சில விவசாய அமைப்பின் உறுப்பினர்களில் பூபேந்தர் சிங் மானும் ஒருவர் ஆவார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் மான் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயியாகவும், விவசாய சங்க தலைவர் என்ற வகையிலும், விவசாய சங்கங்கள் மற்றும் பொது மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டும், பஞ்சாப் மற்றும் விவசாயிகளின் நலனை பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்திலும் எனக்கு வழங்கப்பட்ட எந்த பதவி அல்லது பொறுப்பை தியாகம் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு பதில் வேறு யார் இடம்பெறுவார்கள் என்பதை உச்சநீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE