பல்லடம்: முறைகேடாக உதவித்தொகை பெற முயன்ற அரசு ஊழியர் ஒருவரை பெண் வி.ஏ.ஓ., ஒருவர் விளாசி எடுத்த ஆடியோ வாட்ஸ் ஆப்'பில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர், ஊனமுற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளார். அதுதொடர்பாக பெண் வி.ஏ.ஓ., ஒருவர் விண்ணப்பதாரரிடம் மொபைல் போனில் விசாரணை மேற்கொள்கிறார். முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பம் என்பதால் அதை தனி கவனம் எடுத்து எழுத்துப்பூர்வமான அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக வி.ஏ.ஓ., கூற உரையாடல் துவங்குகிறது.
வி.ஏ.ஓ., கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த விண்ணப்பதாரர், ' 3 ஆண்டுக்கு முன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தேன். குழந்தைகள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நாங்கள் சொந்த வீட்டில் உள்ளோம். மனைவி துணை பி.டி.ஓ.,வாக பணிபுரிந்தவர். இருவருக்கும் பென்சன் இல்லை என்கிறார். அனைத்தையும் பொறுமையாக கேட்ட வி.ஏ.ஓ., நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தானே. இப்போது நான் சொல்கிறேன் கேட்டு கொள்ளுங்கள் என்று பேச துவங்குகிறார்.
அதில், ' நீங்கள் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்துள்ளீர்கள். ஓய்வு பெற்றபோது உங்கள் சம்பளம் 75 ஆயிரம் ரூபாய். உங்களது வீட்டின் மதிப்பு மட்டும் ஒரு கோடி ரூபாய். நீங்கள் சராசரியாக 35 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாழ்குகிறீர்கள். இச்சூழலில், வெறும் 1,500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்கள். சாதாரண வி.ஏ.ஓ., என்று நினைக்கவேண்டாம். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் மக்கள் வந்து செல்லும் இடம் இது. இதையோ முதலும் கடைசியுமாக வைத்துக்கொள்ளுங்கள். கலெக்டரின் உத்தரவை இப்போதே ரத்து செய்கிறேன். அரசு உதவித்தொகை பெற பல்வேறு குறுக்கு வழிகளை கையாளும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை நான் கடுமையாக எச்சரிக்கிறேன் என விண்ணப்பதாரரை விளாசி எடுத்தார்.
முன்னதாக, 'தான் டெக்னீஷியன் வேலை பார்த்தபோது 50 ஆயிரம் ரூபாய் சம்பளமும், ஓய்வு பெற்ற பின் 20 ஆயிரம் ரூபாய் பென்ஷனும் வாங்கி வருகிறேன். பென்ஷனை குறிப்பிட்டால் உதவி தொகை கிடைக்காது. இதேபோல், என்னுடன் வேலை பார்த்த பலரும் உதவித்தொகை வாங்கியுள்ளனர். இங்கு விண்ணப்பித்தால் கிடைக்காது என்பதால் முதல்வர் தனிப்பிரிவுக்கு விண்ணப்பித்தேன் என ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. உயர் அதிகாரிகளுகளுக்கு பயந்தும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் கடமையை மீறும் அரசு ஊழியருக்கு மத்தியில் கலெக்டர் உத்தரவை ரத்து செய்கிறேன் என, துணிச்சலுடன் பதிலளித்த வி.ஏ.ஓ.,வின் ஆடியோ வாட்ஸ் ஆப்'பில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE