மதுரை:மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டை காண டில்லியில் இருந்து தனி விமானத்தில் வந்த ராகுல் தனி மேடையில் அமர்ந்து அரை மணிநேரம் ரசித்தார். அப்போது அவர் பேசுகையில் ''தமிழ் மொழியும் தமிழர்களின் கலாசாரமும் பாரம்பரியமும் நம்நாட்டிற்கு அவசியம். அது மதிக்கப்பட வேண்டும்'' என்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டுக்கு எதிராக 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவாக பேசிய ராகுல் தற்போது 'பலே டிராமா'வாக மதுரை வந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக வாடிவாசலில் காளைகள் களத்தில் வீரர்கள் கேலரியில் பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். 'அரசு விதிப்படி காளைகளை அடக்குவோம்' என வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர். காலை 8:00 மணிக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் நேற்று பார்த்தார். ராகுல் மேடையில் அமர்ந்ததும் அங்கு ஏற்கனவே வந்திருந்த தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி வந்து ராகுல் அருகில் அமர்ந்தார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது ராகுல் பேசியதாவது:ஜல்லிக்கட்டில் பார்வையாளராக பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நேரில் பார்த்தது அழகான அனுபவம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி திட்டமிட்டும் பாதுகாப்பாகவும் நடத்தப்படுகிறது. தமிழ் மொழியும் தமிழர்களின் கலாசாரமும் பாரம்பரியமும் நம் நாட்டிற்கு இன்றியமையாதவை; அவை மதிக்கப்பட வேண்டும்.தமிழக மக்களுடன் இணைந்து அவர்களின் கலாசாரம் பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை. தமிழர்களின் உணர்வுகளை மதித்து பாராட்டவே நேரில் வந்தேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மதுரை விமான நிலையத்தில் ராகுல் அளித்த பேட்டி:மதுரையில் ஜல்லிக்கட்டை நேரடியாக பார்த்த பின் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை; வீரர்கள் தான் காயம் அடைகின்றனர் என்பது தெரிகிறது. தமிழர்களின் கலாசாரம் பண்பாடு வீரத்தை வெளிப்படுத்துகிறது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. டில்லியில் அவர்கள் நடத்தும் போராட்டத்தை மத்திய அரசு அழிக்க சதி செய்கிறது. இரண்டு மூன்று நண்பர்களுக்கு லாபத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போராட்டத்தை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. விவசாயிகளின் நிலங்கள் அவர்கள் விளைவித்த பொருட்களை எடுத்து நண்பர்களுக்கு கொடுக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார். தன் மூன்று நண்பர்களுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை ஒடுக்க மோடி நினைக்கிறார். அவர் நாட்டு மக்களுக்கு பிரதமரா அல்லது அந்த மூன்று முதலாளிகளுக்கு பிரதமரா?இந்தியாவிற்குள் சீனா தொடர்ந்து ஊடுருவி வருகிறது. இதுகுறித்து பதில் அளிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். அந்த மவுனம் ஏன் என்பது தான் என் கேள்வி.இவ்வாறு ராகுல் கூறினார்.
மாறிய ராகுலின் நிலைப்பாடு
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.உச்சநீதிமன்ற உத்தரவுப் படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மாடுகளை காட்சிப் பொருளாகவும் விளையாட்டுகளிலும் பயன்படுத்துவதற்கு தடை விதித்து அதற்கான மிருகங்கள் பட்டியலில் காளை மாடுகள் சேர்க்கப்பட்டன.
அப்போது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது.கடந்த 2011ல் நடந்த இந்த நிகழ்வுகளுக்கு பின் 2017 முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு மீண்டும் அனுமதி அளித்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நேரடியாக பங்கேற்று காளைகளை இளைஞர்கள் அடக்குவதை பார்த்து ரசித்தார்.
பின் பேட்டி அளித்த அவர் ''ஜல்லிக்கட்டில் மாடுகள் பங்கேற்பதால் அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை'' என தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த நிலைப்பாட்டை 'அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி; பலே டிராமா' என பா.ஜ. உட்பட சில கட்சிகளும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான அமைப்புகளும் விமர்சித்துள்ளன.'காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக செயல்பட்டு விட்டு தற்போது அதற்கு ஆதரவாக பேசுவதா...' என்றும் சமூக வலைதளங்களில் பலர் கிண்டலடித்துள்ளனர்.
தமிழக பா.ஜ. பொதுச் செயலர் சீனிவாசன் இதுகுறித்து தன் 'டுவிட்டர்' பக்கத்தில் 'காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து விட்டு தற்போது மதுரைக்கு வந்து அதில் பங்கேற்பதற்கு வெட்கம் இல்லையா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் அப்பவே வந்திருந்தா...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா மேடைக்கு காங்., முன்னாள் தலைவர் ராகுல் வந்தபோது 'அப்பவே இவர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்தால் தடை வாங்கி இருக்க மாட்டார். 2006ல் தடை வாங்கினாரேய்யா. 10 வருஷம் தவம் கிடந்தோமேய்யா,' என விழா மேடையில் இருந்த இரண்டு வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE