டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்| Dinamalar

டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (4)
Share
வாஷிங்டன்: வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டொனால்டு டிரம்பை நீக்க அவரது குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டளித்துள்ளனர். அதேபோல் இந்தியாவை பூர்வீகமாக உடைய நான்கு எம்.பி.க்களும் டிரம்புக்கு எதிராக ஓட்டளித்தனர்.கடந்தாண்டு நவ. 3ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின்
டிரம்ப், அதிபர் டிரம்ப், அமெரிக்கா, பதவி நீக்கம், ஜோ பைடன், குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி, டுவிட்டர், அதிபர் தேர்தல்,

வாஷிங்டன்: வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டொனால்டு டிரம்பை நீக்க அவரது குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டளித்துள்ளனர். அதேபோல் இந்தியாவை பூர்வீகமாக உடைய நான்கு எம்.பி.க்களும் டிரம்புக்கு எதிராக ஓட்டளித்தனர்.கடந்தாண்டு நவ. 3ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார்.இதற்கிடையே 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது' என குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக பார்லி.யின் கூட்டுக் கூட்டம் 6ம் தேதி நடந்தது.அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் கட்டடம் இடம்பெற்று உள்ள கேப்பிடோல் ஹில் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

பதவியில் இருந்து வெளியேற சில நாட்களே உள்ள நிலையில் 'வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது.'அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பயன்படுத்தி டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என ஜனநாயக கட்சி கூறியுள்ளது. அதற்கு துணை அதிபர் மைக் பென்ஸ் மறுத்துவிட்டார்.

இதற்கிடையே 'அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பயன்படுத்தி டிரம்பை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் மேற்கொள்ள வேண்டும்' என பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது.தீர்மானத்துக்கு ஆதரவாக 223 பேரும் எதிராக 205 பேரும் ஓட்டளித்தனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளார். அதே நேரத்தில் ஐந்து பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.


பதவி நீக்க தீர்மானம்


வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக அதிபர் டிரம்புக்கு எதிராக பார்லியில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதன் மீது பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 ஓட்டுகளும் எதிர்த்து 197 ஓட்டுகளும் பதிவாயின.

டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். நான்கு பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.அமி பேரா ரோ கன்னா ராஜா கிருஷ்ணமுர்த்தி பிரமிளா ஜெயபால் என இந்தியாவை பூர்வீகமாக உடைய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரும் டிரம்புக்கு எதிராக ஓட்டளித்தனர்.அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபருக்கு எதிராக இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானம் மீது பார்லியில் விவாதம் நடப்பது இதுவே முதல் முறை.

ஜோ பைடனுக்கு எதிராக பொய் வழக்குகள் தொடரும்படி ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபருக்கு நெருக்கடி கொடுத்ததாக 2019ல் தாக்கல் செய்யப்பட்ட டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் செனட் சபை அதை நிராகரித்தது. இதற்கு முன் 1868ல் அப்போதைய அதிபர் ஆன்ட்ரூ ஜான்சன் 1998ல் பில் கிளிண்டன் மீதான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் செனட் சபை நிராகரித்தது.


அடுத்தது என்ன

அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் அதிபர் பதவியில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கம்:

* பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய கண்டன தீர்மானத்தை அதன் சபாநாயகர் செனட் சபைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

* அதன்பிறகு செனட் சபையில் விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடக்கும்.

* மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால்தான் தீர்மானம் நிறைவேறும். ஆனால் தற்போது செனட் சபையில் இரண்டு கட்சிகளுக்கும் தலா 50 உறுப்பினர்கள் உள்ளனர்.

* இதற்கு முன் மூன்று முறை அதிபர்களுக்கு எதிரான கண்டன தீர்மானம் செனட் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ரூ ஜான்சன் மீதான தீர்மானம் 83 நாட்கள் கிளிண்டன் மீதான தீர்மானம் 37 நாட்கள் டிரம்ப் மீதான தீர்மானம் 21 நாட்கள் விசாரணை நடந்துள்ளது.

* மேலும் ஜன.19ம் தேதி வரை செனட் சபை ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை.

* அதே நேரத்தில் எதிர்காலத்தில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற முடியும்.


'டுவிட்டர்' விளக்கம்வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாக அதிபர் டிரம்பின் கணக்கை டுவிட்டர் சமூக வலைதளம் நிரந்தரமாக முடக்கியுள்ளது.

இது குறித்து அதன் தலைமை செயலர் அதிகாரி ஜாக் டோர்சே கூறியுள்ளதாவது: அதிபரின் கணக்கை முடக்கி உள்ளதால் நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் எடுத்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.சிறந்த முறையில் விவாதிக்கக் கூடிய ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X