புதுடில்லி:நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி நாளை துவக்கி வைக்கிறார். முதல் நாளில் 2934 மையங்களில் மூன்று லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
'தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுடன் பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாடுவார்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் -- ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து 'கோவிஷீல்டு' எனப்படும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகிக்கும் பொறுப்பை மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் ஏற்றுள்ளது.ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனம் 'கோவாக்சின்' எனப்படும் தடுப்பூசியை உள்நாட்டிலேயே உருவாக்கி விநியோகித்து வருகிறது
இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுக்கான அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து தடுப்பூசி வழங்கும் பணி நாடு முழுதும் நாளை துவங்குகிறது. முதல்கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
அதன் பின் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 50 வயதுக்கு உட்பட்ட இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.இது குறித்து மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி நாளை துவக்கி வைக்கிறார். தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள 'கோ -- வின் அலைபேசி' செயலியையும் பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.
முதல் நாளில் 2934 மையங்களில் மூன்று லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் அந்தந்த மையங்களில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமருடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மையங்களிலும் நாள் ஒன்றுக்கு தலா 100 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மேல் தடுப்பூசி வழங்க மாநில அரசுகள் அவசரம் காட்ட கூடாது எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் பணிகள் சிக்கலின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்ட பின் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.
தற்போது 1.65 கோடி 'டோஸ்'கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.முதல் 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்ட 28 நாட்களுக்கு பின் இரண்டாவது 'டோஸ்' செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் எப்போதும் போல கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சந்தேகங்களும், பதில்களும்
தடுப்பூசி பற்றிய பொதுவான சந்தேகங்கள் குறித்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை மாதங்கள் இருக்கும் என்பது உறுதி செய்யப்படாததால் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.
அதே போல தொற்று பாதிப்பு இருக்கும் நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கூடாது. சிலருக்கு சிறிய அளவிலான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். லேசான காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பக்க விளைவுகள் ஏற்படுபவர்களுக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE