சென்னை:''போலீசாரின் அர்ப்பணிப்பால் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது'' என முதல்வர் பழனிசாமி பாராட்டினார்.
சென்னை மாநகர போலீஸ் சார்பில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கூறியதாவது:தமிழகத்தில் அமைதி வளம் வளர்ச்சி என்ற அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த ஆட்சியை வழங்கினார். அவரது வழியில் செயல்படும் தற்போதைய தமிழக அரசு மத்தியில் பல்வேறு துறைகளுக்கான விருதுகளை பெற்று வெற்றி நடை போடுகிறது.
இந்த வெற்றி நடைக்கு தமிழகத்துக்கு அச்சாணியாக இருந்து தமிழக காவல்துறையும் வீரநடை போடுகிறது.தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம். காவல்துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகின்றனர். எனவே தான் காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. காவல்துறையின் பணிகள் சிறக்க நான்காவது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய சவால்களை எதிர்கொள்ள காவல்துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. காவல் துறையில் காலி பணியிடங்கள் குறைக்கப்பட்டு பணிநியமனங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல நமக்கெல்லாம் பொங்கல் நன்னாளில் நல்ல வழி பிறக்கும்.இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில் உள்துறை செயலர் பிரபாகர் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல்வர் மதுரை வருகை
மதுரை: ஜல்லிக்கட்டு, கொரோனா தடுப்பூசி துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க இன்றிரவு (ஜன.,15) முதல்வர் பழனிசாமி மதுரை வருகிறார்.
சேலத்தில் இருந்து கிளம்பி இரவு 10:00 மணிக்கு மதுரைக்கு காரில் வருகிறார். சர்க்கியூட் ஹவுஸில் தங்குகிறார். நாளை காலை 8:00 மணிக்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். இதில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பங்கேற்கிறார். காலை 9:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு முதல்வர் வருகிறார்.
காலை 9:45 மணிக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை இங்கே துவக்கி வைக்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மதியம் 12:40 மணிக்கு சர்க்கியூட் ஹவுஸிற்கு செல்கிறார். சிறிது நேர ஓய்வுக்கு பின் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், மதியம் 1:55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE