தற்போது முன்னிலையில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் எவை. அவற்றின் செயல்திறன் என்ன.
உலகளவில் முன்னிலை வகிக்கும் தடுப்பூசிகளில் பைசர், ஸ்பூட்னிக் வி, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவை அடக்கம். கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பைசர் 95 சதவீதம், ஸ்பூட்னிக் 92, கோவிஷீல்டு 70.4 சதவீதம் செயல்திறன் கொண்டவை.
தடுப்பூசி யாருக்கு வழங்கப்படும்.
முன்களப் பணியாளர்களை தொடர்ந்து, மூத்தக்குடி மக்கள், இணை நோய் இருப்பவர்கள், இதர பெரியவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் தடுப்பூசி போடப்படும். ஏனென்றால் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களிடம் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுவிட்டது. 12--18 வயதினருக்கு இத்தடுப்பூசியை செலுத்துவதற்கான சோதனைகள் நடக்கின்றன. இதற்கு வெற்றி கிடைத்ததும் அனுமதிக்கப்படலாம்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தடுப்பூசி தேவையா.
அவர் தொற்றுக்கு எதிரான சக்தியை பெற்றிருப்பார். ஆனால் இது நீண்ட காலத்திற்கு அவரை பாதுகாக்கும் என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. மாறாக, அவர் பெற்ற ஆன்டிபாடிகள் காலப் போக்கில் குறைகின்றன. எனவே இவர்களுக்கும் தடுப்பூசி தேவைப்படலாம். தட்டுப்பாடு காலங்களில் இவர்களின் பெயர் கடைசியாக பரிந்துரைக்கப்படும்.
தடுப்பூசியை கர்ப்பிணிகள் பெறலாமா.
இன்றைய நிலவரப்படி கர்ப்பிணிகளிடத்தில் தடுப்பூசி சோதனை நடத்தப்படவில்லை. இதனால் அவர்களுக்கு தடுப்பு மருந்து எவ்வளவு பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
நோய் எதிர்ப்பு குறைபாடு பிரச்னை உள்ளவர்களுக்கு இதை வழங்க முடியுமா.
முடியும், எம்.ஆர்.என்.ஏ., மற்றும் செயலற்ற வைரஸ் மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. அடினோவைரஸ் வெக்டர் தடுப்பூசி கூட இவர்களுக்கு நல்லது தான்.
தடுப்பூசிக்கு பரிந்துரைக்கப்பட்ட டோஸ், கால அட்டவணை என்ன.
இந்திய அரசு பரிந்துரைத்த கோவிஷீல்டு தடுப்பூசி என்றால் 0.5 மி.லி., வீதம் 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் செலுத்த வேண்டும்.
தடுப்பூசி செலுத்தியதில் இருந்து நோய் எதிர்ப்பு திறன் (ஆன்டி பாடிகள்) உருவாக எவ்வளவு காலம் ஆகும்.
பொதுவாக ஆன்டிபாடிகள் உருவாக இருவாரங்கள் ஆகும். பைசர் தடுப்பூசி 10 நாளில் எதிர்ப்பு திறனை உற்பத்தி செய்கிறது.
தடுப்பூசியால் கிடைக்கும் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்.
மீண்டும் தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் தேவைப்படுமா.இதற்கு இன்னும் தெளிவானவிளக்கத்தை விஞ்ஞானிகள் தரவில்லை. ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்த தடுப்பூசி (கோவிஷீல்டு) பல மாதங்களுக்கு பிறகும் நீடித்த செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளன. நீண்ட செயல்திறன் இருந்தால் எந்த பூஸ்டரும் தேவையில்லை. ஆனால் இது காலத்தால் மட்டுமே நிரூபிக்கப்படும்.
பக்க விளைவுகள் ஏதேனும் உண்டாகுமா.
இதுவரை நடந்து முடிந்த சோதனைகளில் வலி, லேசான காய்ச்சல் போன்ற சாதாரண பாதிப்புகளை தவிர வேறு எந்த பிரச்னைகளும் நேரிடவில்லை
இந்த தடுப்பூசிகளை எந்த வெப்பநிலையில் பாதுகாப்பர்.
கோவிஷீல்டு, ஸ்பூட்னிக் தடுப்பூசிகளை 2-8 டிகிரி செல்சியசில் சேமிக்கலாம்.
* சர்க்கரை நோயாளிக்கு தடுப்பூசி எடுக்க முடியுமா.
நிச்சயம் எடுக்கலாம். கொரோனா பாதிப்பில் சர்க்கரை நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படலாம் என்ற பட்டியலில் இருப்பவர்கள். இவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து சர்க்கரை நோயாளிகளும் தடுப்பு மருந்து பெறுவது அவசியம்.
* ஒரே ஒரு டோஸ் மட்டும் எடுத்தால் என்ன ஆகும்.
தடுப்பூசி இரண்டு முறை செலுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு டோஸ் செலுத்திக் கொண்டாலே சிறப்பான பாதுகாப்பு கிடைத்திருக்கிறது.
* தடுப்பூசி பெற்றதும் சாதாரணமாக நடமாடலாமா.
கொரோனா புதிய தொற்று. தினசரி இது பற்றி கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம். எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் பாதுகாப்பை தராது. தடுப்பூசி பெற்ற ஒருவர் நோயை உருவாக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் வைரஸை ஏற்று மற்றவர்களுக்கு பரப்பக்கூடும். எனவே தடுப்பூசி பெற்றாலும் முகக்கவசம், சமூக இடைவெளியை இன்னும் சில காலம் கடைபிடிப்பது அவசியம். அவ்வப்போது கைகழுவி சுத்தமாக இருக்க வேண்டும். ஒரே சமயத்தில் 70 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றால் தான் வைரஸ் பரவல் கட்டுப்படும்.
-டாக்டர் மா. பழனியப்பன்
ஆஸ்துமா மற்றும்
நுரையீரல் சிகிச்சை நிபுணர்
மதுரை, 94425 24147
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE