கோவை:'ஆர்டர்' கையில் இருந்தும், 30 சதவீதம் வரை பணியாளர் பற்றாக்குறை நிலவுவதால், திணறும் தொழில் துறையினர், வடமாநில தொழிலாளர்களை அழைத்து வர, சிறப்பு ரயில்களை அதிகரிக்க கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தொழில் நகரான கோவையில், ஆட்டோமொபைல், கிரைண்டர், மோட்டார் பம்ப் செட் என பல்துறை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் முடங்கிய தொழில் துறை மீண்டு வர ஏதுவாக வங்கிக்கடன், தவணை செலுத்த அவகாசம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.தொழில்துறை மீண்டுவரும் சமயத்தில், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளியது. இப்பிரதான பிரச்னையை கட்டுப்படுத்தும் கோரிக்கை ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணியாளர் பற்றாக்குறை உள்ளது.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், 80 சதவீதம் வரை ஆர்டர்கள் வரத்துவங்கியும், பணியாளர் இல்லாததால், ஆர்டர்களை முடிக்க முடியாத நிலை உள்ளதாக, தொழில்முனைவோர் புலம் புகின்றனர்.கோவையில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வடமாநிலத்தவரில், 30 சதவீதம் பேர் மீண்டும் திரும்பாததால், சிறப்பு ரயில்களை அதிகரிக்க கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க(கொடிசியா) தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது:கொரோனாவில் இருந்து மீண்டு வந்த, ஒன்றிரண்டு மாதங்களில் மூலப்பொருள் விலை உயர்வு தலைவலியாக மாறிவிட்டது. தற்போது மூன்று, நான்கு மாதங்களுக்கான 'ஆர்டர்' கையில் உள்ளது. இருப்பினும், மூலப்பொருட்கள் விலை ஏற்றம், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஆர்டர்களை முடிக்க முடியவில்லை.
வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக வரத்துவங்கியும், 30 சதவீதம் பேர் பற்றாக்குறை உள்ளது. மூலப்பொருள் விலை ஏற்றத்தால், வேலை நிறுத்தம் ஏற்படுகிறது. ஒரு வாரம் பார்த்து விட்டு அடுத்தடுத்த வேலைகளுக்கு, வட மாநிலத்தவர் தாவி விடுகின்றனர்.மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறப்பு ரயில்கள் மூலம் வடமாநில தொழிலாளரை அழைத்து வரவும், அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதிப்புகள் குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE