கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில், பட்டி மிதித்தல் நிகழ்வு, வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் உழவு பணியில் ஈடுபடுத்தப்படும் மாடுகள், சிறப்பு பூஜைகளுடன் மேளதாளங்கள் முழங்க, தடாகம் சாலையிலுள்ள மாதேஸ்வரன் கோவிலிலிருந்து, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.இதை தொடர்ந்து இளநீர், தயிர், பால், தண்ணீர், நவதானியங்கள் நிரம்பிய பட்டி குளத்தில், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் மிதித்தல் நிகழ்வு நடந்தது.முன்னதாக, சூரியனுக்கு படையல் வைத்து, பண்ணையில் பணிபுரியும் மகளிர் குலவை ஒலி எழுப்பி பொங்கல் வைக்கப்பட்டது. மாடுகளுக்கு சர்க்கரை பொங்கல் கொடுக்கப்பட்டது.விழாவில், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலை துணைவேந்தர் குமார் பரிசுகளை வழங்கினார். அப்போது துணைவேந்தர் பேசியதாவது:பொங்கல் நாளில் பட்டி மிதித்தல் நிகழ்வு என்பது, தமிழகத்தின் முக்கிய நிகழ்வாகும். கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்வில், எதை மாடுகள் முதலில் மிதிக்கிறதோ, அதுவே அந்த வருடத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.இந்த வருடம், பட்டி குளத்தில் உள்ள நவதானியத்தை, பசுமாடு கால்வைத்து அங்கீகரித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு மழையும் தானிய உற்பத்தியும் அதிகரிக்கும்.தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக, பெரும்பாலான பயிர்களில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இது பற்றி, வேளாண் பல்கலை தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், துணைவேந்தர் மற்றும் விஞ்ஞானிகள் பயணித்தனர். இந்நிகழ்ச்சியில், பயிர் மேலாண்மைத்துறை இயக்குனர் கீதாலட்சுமி, பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் கீதா, தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் புகழேந்தி, உழவியல் துறை தலைவர் சின்னமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 11 புது பயிர் ரகம் அறிமுகம்துணைவேந்தர் குமார் பேசுகையில், ''வேளாண்மை பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, இந்தாண்டு நெல்லில் மூன்று ரகங்களும், கேழ்வரகு, வரகு, உளுந்து, குடம்புளி, விளாம்பழம் உட்பட வேளாண்மையில் நீடித்து நிலைக்கும், 11 வகையான பயிர்கள் அறிமுகம் செய்துள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE