மதுரை:உலகின் விலை மதிக்க முடியாத செல்வம் ஆரோக்கியம் தான். போட்டி மற்றும் பொழுது போக்கு விளையாட்டுகள் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களின்
ஆரோக்கியத்தை வளர்க்கும் வகையில் தென்னந்தோப்பில் வித்தியாசமான மைதானத்தை அமைத்துள்ளார் மதுரை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ரெங்கராஜன்.
மதுரை கள்ளந்திரியில் 6 ஏக்கர் நிலத்தில் ரெங்க ராஜன் ஸ்போர்ட்ஸ்ஹெல்த் சென்டர்
அமைத்து உள்ளார். அதில் வாலிபால், ஓப்பன் பாட்மின்டன், வாக்கிங் டிராக், ரன்னிங் டிராக்,
புல் அப்ஸ் பார், லாங் ஜம்ப் மற்றும் கிரிக்கெட் பிட்ச் அமைத்துள்ளார். இங்குள்ள 60 அடி
குளத்தில் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக 'லைப் ஜாக்கெட்' வாங்கி வைத்துள்ளார்.
கொரோனா காலத்தில் மேல கள்ளந்திரி, கீழ கள்ளந்திரி, பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, மாத்துார் கிராம மக்களுக்கு இந்த ஸ்போர்ட்ஸ் சென்டர் தான் வடிகாலாக அமைந்துள்ளது. குட்டீஸ்கள் குளத்தில் நீச்சல் பழக, பெரியவர்கள் நடைபழக, இளைஞர்கள் விளையாடி பழக இலவச அனுமதியும் வழங்கியுள்ளார். 6 ஏக்கர் நிலத்தில் மா, கொய்யா, தென்னை, நெல்லி,
சப்போட்டா மரங்களுக்கு நடுவே கிரவுண்ட், சிறிய பார்க், சிறிய ஓய்வெடுக்கும் அறையும் அமைத்துள்ளார்.
காலை 5:30 முதல் 9:00, மாலையில் 3:00 - 6:30 மணி வரையும் விருப்பமான விளையாட்டுகளை விளையாடலாம். நீந்தலாம். தென்னை மரங்களை சுற்றி ஓடிப் பிடிக்கலாம் என்பது போல குடும்பத்தினருக்கான பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றியுள்ளார். விடுமுறை நாட்களில் பகல் 12 மணி வரை அனுமதி உண்டு.
தோப்பை கிரவுண்டாக மாற்றியது எப்படி… அவரே விவரிக்கிறார்.என் அப்பா நடராஜன் வாலிபால் வீரர். தடகள விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். 1974ல் மதுரை கல்லுாரி மாணவராக இருந்தபோது தேசிய அளவில் நடந்த டெக்கத்லான் போட்டியில்சாம்பியன் பட்டம்
வென்றேன்.எஸ்.ஐ., நேரடி தேர்வில் உடற்திறன் தகுதியில் 5 ஸ்டார்ஸ் பெற்று வெற்றி பெற்றேன். ரயில்வேயில் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது.
உடற்கல்வி ஆசிரியர் மகாதேவனிடம் காண்பித்து வாழ்த்து பெறச் சென்ற போது, இங்கேயே மாணவர்களுக்கு பயிற்சி கொடு என்றார். மதுரை கல்லுாரியில் 1987ல் உடற்கல்வி
இயக்குனராக சேர்ந்தேன். தற்போது பணி ஓய்வு பெற்றுஅதே கல்லுாரி சுயநிதிபிரிவுக்கு உடற்கல்வி இயக்குனராக பணிபுரிகிறேன்.கள்ளந்திரியில் என் சொந்த நிலத்தில்
மாணவர்களுக்காக மைதானத்தை உருவாக்கினேன். கட்டணம் வாங்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளேன். வாலிபால், ஓப்பன் பாட்மின்டன், கபடி போட்டிகளை
இலவசமாக நடத்தலாம். இலவசமாக நீச்சல் பழகலாம். போலீஸ், மிலிட்டரி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக ரோப் கிளைம்பிங், புல் அப்ஸ் பார் அமைத்துள்ளேன். நானும் பயிற்சி தருகிறேன்.
கொரோனா ஊரடங்கில் ஸ்கவுட் மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைதோறும் இங்கு சமூக இடைவெளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அழகர்கோவில் பக்தர்கள் இங்கு இளைப்பாறிச்
செல்லலாம். வீக் எண்ட் விளையாட்டிற்காக குடும்பத்துடன் வருபவர்களுக்காக நிறைய ஸ்டோன் பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வழக்கமான மைதானம்
என்பதைத் தாண்டி மாறுபட்ட சூழலைத் தரவேண்டும் என்பது என் கனவு. அது நனவாகி
விட்டது. இன்னும் நிறைய மேம்படுத்த வேண்டும் என்றார்.
செலவின்றி விளையாட்டை விளையாட்டாக பொழுதுபோக்க நினைப்பவர்களுக்கு இந்த இடம் சொர்க்கபூமி தான். நின்றும், நடந்தும், விளையாடியும் நீந்தியும் மகிழலாம்.இவரைப் பாராட்ட 80982 59995.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE