''நாயரே, நேத்து பொங்கல் கொஞ்சம் நிறைய சாப்பிட்டுட்டேன்... சூடா சுக்கு காபி போடும்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணா, ''கொரோனாவை பத்தி, யாருமே கவலைப்பட மாட்டேங்கறா ஓய்...'' என்றார்.
''எல்லாருக்கும் குளிர் விட்டு போயிட்டுல்லா...'' என்றார், அண்ணாச்சி.
''ஆமாம்... மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அஞ்சாம் கட்ட பிரசாரத்தை ஆரம்பிச்சு நடத்திண்டு இருக்காரோல்லியா... அவரும், அவரை சுத்தி இருக்கறவா மட்டும், முக கவசம் மாட்டிண்டா போதுமாங்கறேன்...''அவரது பிரசார கூட்டங்கள்ல, கட்சிக்காராள்லாம் முண்டியடிச்சுண்டு நிக்கறா ஓய்... இவாளால, கொரோனா ரெண்டாவது அலை பரவிடப்டாதுன்னு பலரும் பயப்படறா... அதனால, கட்சிக்காராளுக்கு கமல் கடிவாளம் போட்டா நல்லது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பில் பணத்தை கேட்டு நச்சரிச்சவங்க இப்ப, 'கப்'புன்னு அமைதியாகிட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாநகராட்சியில, 1,700 கோடி ரூபாய்க்கு நிறைய வேலைகள் நடந்திருக்குது... சாலைகள் போட்டது, மழை நீர் வடிகால் கட்டியது, பூங்கா அமைச்சது, குடிநீர் குழாய்கள் பழுது பார்த்ததுன்னு, கான்ட்ராக்டர்களுக்கு ஏகப்பட்ட பில்கள் வழங்கப்படாம, ஒரு வருஷமா கிடப்புல கிடக்குது பா..
.''பில் தொகையை கேட்டு, கான்ட்ராக்டர்கள் மன்றாடிட்டு இருந்தாங்க... ஆனா, கொரோனா காலத்துல நிறைய செலவாகிட்டதால, மாநகராட்சியின் கஜானா காலியா இருக்குது பா...
''இதுக்கு இடையில, அதிகாரிகள் தரப்புல மூணு பேர் கமிட்டி போட்டு, பணிகள் சம்பந்தமான பைல்களை மறு ஆய்வு செய்திருக்காங்க... இப்படி, 80 பைல்களை சரி பார்த்ததுல, 76 பைல்கள் விதிமுறைக்கு உட்பட்டு இல்லையாம் பா...
''இதனால, அதுக்கெல்லாம் விளக்கம் கேட்டு, அந்தந்த அதிகாரிக்கே, பைல்களை திருப்பி அனுப்பிட்டாங்க... இந்த அதிரடியால, கான்ட்ராக்டர்கள் கப்சிப் ஆயிட்டாங்க... அதே நேரம், இன்ஜினியரிங் பிரிவு அதிகாரிகள் பீதியில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ரெண்டு பேரும், ஒரே இடத்துல முட்டிட்டு நிக்காதீயன்னு அறிவுரை குடுத்திருக்காவ வே...'' என, கடைசி மேட்டருக்கு நகர்ந்தார், அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கரூர் சட்டசபை தொகுதியில போட்டியிட, 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தயாராகிட்டு இருக்காரு... இப்ப, தி.மு.க.,வுல இருக்கிற, 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜியும், இதே தொகுதியில களமிறங்க முடிவு பண்ணியிருக்காரு வே...
''இவங்க ரெண்டு பேர்ல யார் ஜெயிச்சாலும், அவங்க கட்சி ஆட்சிக்கு வந்தா, அமைச்சர் ஆயிடுவாவ... அதே நேரம், யாராவது ஒருத்தர் தோத்து போயிட்டாலும், சமுதாய ரீதியான பாதிப்புன்னு, இவங்க சார்ந்த கொங்கு வேளாள கவுண்டர் சமுதாய பிரமுகர்கள் நினைக்காவ வே...
''அதனால, ரெண்டு பேரும் ஒரே தொகுதியில நிற்காம, செந்தில் பாலாஜி, இப்ப, எம்.எல்.ஏ.,வா இருக்கிற அரவக்குறிச்சியிலயே நில்லுங்கன்னு அறிவுரை தந்துட்டு இருக்காவ வே...''என்றார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் நகர்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE