கர்நாடக சங்கீதம் முதல், நவீன இசை, கவிஞர், ஓவியர், சமூக சேவகி, கட்டடக் கலை வடிமைப்பாளர் என பன்முகத் திறமை வாய்த்தது குறித்து சக்திஸ்ரீ கோபாலன்: நான் பிறந்தது கேரள மாநிலம் கொச்சியில். பள்ளிப் படிப்பை அங்கே தான் முடித்தேன்.சென்னையில் தான், கட்டடக்கலை வடிவமைப்பு படிப்பான, 'ஆர்க்கிடெக்ட்' படித்தேன். அதுவும் கலையுடன் தொடர்புடையது தானே!அம்மா வழி பாட்டி தான், முதன் முதலில் சங்கீதத்தை என்னுள் விதைத்தார். வீட்டில், கோவிலில் அவர் பாடும் போது கேட்டு ரசித்துள்ளேன். மேலும் என் உறவினர்கள் பலரும் இசைத் துறையில் தான் உள்ளனர்.
கடந்த, 2008 முதல் பாடத் துவங்கி, இப்போது வரை பாடிக் கொண்டிருக்கிறேன். சாஸ்திரிய சங்கீதத்தில் நல்ல பயிற்சி உண்டு. தவிர ஜாஸ், ப்ரூஸ் வரை பாடல்களையும் நான் பாடிக் கொண்டு இருக்கிறேன். வாத்தியங்களில் கீ - போர்டு, கிதார் வாசிப்பேன். பாங்கோஸ் கூட, வாசித்துள்ளேன். இது தவிர, நானே எழுதி, இசையமைத்த தனிப்பாடல்கள் பலவற்றை, தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் உருவாக்கியுள்ளேன். ஓவியத்திலும் ஆர்வம் உண்டு.
பெரும்பாலும் அனைத்து தென் மாநில இசையமைப்பாளர்களிடமும் வேலை பார்த்துள்ளேன். கட்டடக் கலையிலும் ஆர்வம் அதிகம். சென்னையில் சில குறிப்பிடத்தக்க கட்டடங்களை நானே வடிவமைத்துள்ளேன். எதை செய்யதாலும் திறமை, உழைப்பை, 200 சதவீதம் கொடுக்கத் தான் விரும்புகிறேன்.
'குளோபல் ஷேப்பர் கம்யூனிட்டி' என்ற தொண்டு நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. அந்த தொண்டு நிறுவனத்தின் கிளைகள், உலகம் முழுதும் உள்ளன. அதன் சென்னை பிரிவில் நானும் உள்ளேன். அந்த தொண்டு நிறுவனம் மூலம் நிறைய சேவை செய்ய முடிந்தது. விருப்பம் உள்ள எந்த தனி நபரும் இந்த நிறுவனத்தில் இணையலாம். எந்த விதமான சேவைகள் செய்யவும் அதில் வாய்ப்புகள் உண்டு. இதில் மருத்துவர்கள், பள்ளி முதல்வர்கள், கலைஞர்கள், திருநங்கையர் என பலரும் உள்ளனர். மருத்துவ உதவி, சுகாதாரம் போன்ற பல சமூக சேவைகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செய்துள்ளேன்.
என்னை பொறுத்தவரை பெண்கள், பல திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்; நிறைய கனவு காண வேண்டும். அது நிறைவேற, இந்த சமுதாயமே பெண்களுக்கு உதவி செய்யும். எனக்கு தெரிந்த வரை, நம்ம ஊரில் இன்னும் ஆண், பெண் பாகுபாடு உள்ளது. பெண்களை புறக்கணித்து, ஆண் குழந்தைகளுக்கு நிறைய செலவிடும் போக்கு தான் உள்ளது. எனினும், அதைப் பற்றி கவலைப்படாமல், தனி மனித முயற்சி மூலம், பொதுவான, பொறுப்பான சமூகத்தை உருவாக்க, விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த முடியும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE