ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ஆதரித்து, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட, காங்., கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், அதில் பங்கேற்கவில்லை. வி.சி., தலைவர் திருமாவளவன் இடையிலே கழன்றுச் சென்று விட்டார்.
தி.மு.க., - எம்.பி., ஒருவர் நைசாக, டிபன் சாப்பிட கிளம்பியிருக்கிறார்.இந்த உண்ணாவிரதம், விவசாயிகளை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம் என்பது, வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. கடந்த, 2009, ஏப்., 27ல், 'இலங்கையில் நடந்துவரும் இன அழிப்பு போரை, மத்திய அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்; இல்லையேல், இலங்கை தமிழருக்காக, என்னுயிரை விடப் போகிறேன்' என்று சூளுரைத்து, மெரினா கடற்கரையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அடுத்த சில மணி நேரத்தில், 'இலங்கையில் போர் நின்று விட்டது' என அறிவித்து, தானாகவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.அவரின் இந்த, 'அரிய சாதனை'யை பார்த்து, நாடே வியந்து, 'பாராட்டியதை' மறக்க முடியுமா?நம் நாட்டின் விடுதலைக்காக, தீண்டாமைக்கு எதிராக, மத நல்லிணக்கத்துக்காக மகாத்மா காந்தி, தன் வாழ்நாளில், 17 முறை, மொத்தம், 139 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.இதில், மூன்று முறை, தொடர்ந்து, 21 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து போராடியிருக்கிறார்.
தமிழகத்தில், உண்ணாவிரத போராட்டம் என்றாலே நினைவுக்கு வருபவர், தியாகி சங்கரலிங்கனார் தான். அவர், 'மது விலக்கு வேண்டும், சென்னை மாகாணத்தை, தமிழகம் என்று பெயர் மாற்றம் வேண்டும்' என்பது உட்பட, 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து, விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்தார்.கடந்த, 1956 ஜூலை, 27ல் துவங்கிய உண்ணாவிரத போராட்டம், 76 நாட்கள் நீடித்து, அக்., 13ல் நிறைவுற்றது. ஆனால், இறுதி நாளன்று அவரது உயிரும் பிரிந்தது.உண்ணாவிரத போராட்டத்தால், உயிரை இழந்த உண்மையான தமிழ்த் தியாகி சங்கரலிங்கனார் தான்.
மகாத்மா காந்தி போன்ற உத்தமர்கள், அன்னியரை எதிர்த்து அறவழியில் போராடுவதற்காக பயன்படுத்திய புனிதமான ஆயுதம் தான், உண்ணாவிரத போராட்டம். ஆயுதங்களை துாக்கிய ஆங்கிலேயர், அகிம்சை போராட்டத்தைக் கண்டு பிரமித்தனர்; பின்வாங்கினர்.இன்றைய அரசியல்வாதிகள் விளம்பரத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும், 'உண்ணாவிரதம்' என்ற பெயரில் நாடகமாடுகின்றனர்.
விவசாயிகள், இவர்களது வலையில் வீழ்ந்து விடக் கூடாது.அவர்களது போராட்டத்தில் உண்மை இருந்தால், சாகும் வரை உண்ணாவிரதம் என, களமிறங்கட்டும்.
இது கருத்து சுதந்திரம் இல்லை!
மணிமேகலை, கூத்தம் பாளையம், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமூக வலைதளம் என்பது, குழாயடி சண்டை நடக்கும் இடமாக உள்ளது. அங்கே, காது கூசும் அளவுக்கு, அசிங்கமான வார்த்தைகளை உபயோகித்து, சண்டையிடுகின்றனர்.இதை விட கொடுமை என்னவென்றால், தன் படுக்கை அறை அந்தரங்கங்களைக் கூட, சமூக வலைதளங்களில் பதிவேற்றி, 'புகழ்' பெற, சில பெண்களே முன்வருகின்றனர்.
'டிக்டாக்' என்ற சமூக வலைதளம் சமீபத்தில் தடை செய்யப்பட்டது. அதில் நடந்த கண்றாவிகளை எல்லாம் பார்த்தால், தலையில் அடித்துக்கொள்ள தோன்றியது.'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' இப்படி எத்தனை இருந்தாலும், அத்தனையிலும் அநாகரிக செயல்களே அதிகம் நடக்கின்றன.இதை எல்லாம் கண்டிக்கவோ, தடை செய்யவோ, பெற்றோரால் இயலவில்லை. தன் மகனோ, மகளோ மொபைல்போன் வழியே தவறான பாதையில் செல்வது, அவர்களுக்கு தெரியவில்லை; எளிதில் கண்டறியவும் முடியவில்லை.
அச்சில் ஏற்ற முடியாத அசிங்கங்கள் சமூக வலைதளங்களில் நடக்கின்றன. அதெல்லாம், 'கருத்து சுதந்திரம்' என்ற வரையறைக்குள் வராது.சினிமாவிற்கு இருப்பது போல, 'டிவி' நிகழ்ச்சி மற்றும் மொபைல்போன் செயலிக்கும் தணிக்கை வேண்டும். நாளைய சமுதாயத்தை கருதி, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி யாராவது இருக்கிறாரா?
அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகம், விரைவில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதனால் ஆளாளுக்கு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வின் நிறுவனர் எம்.ஜி.ஆரை, அக்கட்சி சில நாட்களாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அதுவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உயிருடன் இல்லாததால் தான் என்பது, நாம் அறிந்ததே!தற்போது ஆளுங்கட்சியாக உள்ள, அ.தி.மு.க.,வின் தலைவர்கள், 'இது, ஜெ., ஆட்சி' எனக் கூறிக் கொள்கின்றனர். அது உண்மை தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில், இந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பட்டியல் தயாரித்து, கவர்னரிடம் கொடுத்திருக்கிறார்.
பதிலுக்கு, தி.மு.க., ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களை, அ.தி.மு.க.,வினர் மேடைகளிலும், ஊடகங்களிலும் வெளிச்சமிட்டு காட்டி வருகின்றனர்.'இரு கட்சிகளும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று, காமராஜர் அன்றே தெளிவாக கூறிவிட்டார்.தற்போது விஜயகாந்த், கமல், அரசியலுக்கு வருவதாக ஏமாற்றிய ரஜினி உட்பட பலரும், எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடினர்.
சரி, அப்படி என்ன, எம்.ஜி.ஆர்., ஆட்சி செய்து விட்டார் என்று பார்த்தால், அவர் ஆட்சி செய்த முதல் மூன்று ஆண்டுகள், எந்த ஊழல் குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக வரவில்லை.தன், 'சத்யா ஸ்டுடியோ' விற்று, கட்சி நடத்த வேண்டிய சூழல் உண்டானது. அவருக்கு உடல் நிலை சரியில்லாத போது, அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
இப்போது ஆட்சிக்கு வரத் துடிப்போர் யாராவது, 'ஓமந்துாரார், காமராஜர் வழியில், நாங்கள் ஆட்சி செய்வோம்' என, பேச்சுக்காவது சொல்வர் என, எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.இந்த காங்கிரஸ் கட்சியாவது, அவர்களது பெயரை உச்சரிக்கும் என்று பார்த்தால், சத்தத்தையே காணோம்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியை மட்டும் பார்த்த வாக்காளர், இன்று அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு, 'இந்த லஞ்சம், ஊழல் பெருக்கெடுத்து கிடப்பது தான், அரசியலா?' என்ற எண்ணம் இருக்கும்.அவர்களுக்காக, ஒரு நேர்மையான தலைவர் தோன்ற வேண்டும்; ஆனால் அப்படி யாரும் கண்ணுக்கு தெரியவில்லையே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE