'மகிழ்ச்சி அடைஞ்சிடாதீங்க... விவசாயிகளுக்கு, 'ஆப்பு' அடிக்க, எதிர்க்கட்சில்லாம் கிளம்பி, வெற்றியும் பெற்றுட்டாங்களே... பாவம் விவசாயிங்க... எதுவுமே புரியாம, தம் தலையில தாமே மண் அள்ளிப் போட்டுக்கிட்டாங்க...' என பரிதாபப்படத் தோன்றும் வகையில், பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் பேட்டி: பா.ஜ., மட்டும் தான் தமிழர்களின் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான பொங்கல். அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு அவர்களே நல்ல விலை நிர்ணயிக்க முடியும்.
மிகப் பெரிய, 'ஜிங்சாக்' கொட்டும் வகையில், பா.ஜ.,வில் இணைந்துள்ள, தி.மு.க., முன்னாள் எம்.பி., ராமலிங்கம் பேட்டி: தமிழர்களுடைய பண்பாட்டை இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் வெளிப்படுத்தும் எண்ணத்தோடு, பா.ஜ., இன்று மிகப்பெரிய முயற்சி எடுத்து இருக்கிறது. நேருவை விட சரியான தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார்.
'காலம் காலமா அது தானே நடக்குது... மக்களுக்கு ஒண்ணுமே புரியலியே...' என சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேச்சு: வியாபாரத்திற்காக, தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி, நான்கு மொழி கற்று தருகின்றனர். தி.மு.க., தலைவர்களும், கட்சியினரும் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து வேறு மொழிகளை கற்று கொடுக்க மாட்டோம் என, 'போர்டு' மாட்ட தயாரா... அவர்கள் தயாராக இல்லை. மக்களை தி.மு.க.,வினர் ஏமாற்றுகின்றனர்.
'பரவாயில்லையே... தைரியமா கருத்து தெரிவிக்கிறீங்களே...' எனச் சிரிக்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி: தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், வரும் சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும். நாங்கள் கேட்பது மற்றும் கூட்டணி ஒதுக்கும் தொகுதிகள் பற்றி கலந்தாலோசித்து போட்டியிடுவோம்.
'வாஸ்தவமான பேச்சு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி: கொரோனா காலத்தில், வியாபாரிகள் செலுத்த வேண்டிய கடைகளுக்கான வாடகையை, தமிழக அரசு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். லைசென்ஸ் எடுக்க, 2,000 ரூபாய் ஆன்லைனில் செலுத்த விதிகள் உள்ள நிலையில், 5,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது.எனவே, அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'நம்ம மக்களை முட்டாளுங்கன்னு சொல்றதே உங்களுக்கெல்லாம் வழக்கமா போச்சு...' என சாடத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: முதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த, மத்திய, பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதனால் ஏழை, பிற்படுத்தப்பட்டோரின் சட்டம் படிக்கும் கனவு நிறைறேவாமல் போய் விடும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE