தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்: தமிழகத்தில், பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால், பறவை காய்ச்சல் நோய் பரவாது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
'டவுட்' தனபாலு: உதாரணத்துக்கு, நீங்களே சிக்கன் சாப்பிடுவது போல், 'டெமான்ஸ்ட்ரேட்' செய்து காண்பியுங்களேன்... ஒரு, 'கண்டிஷன்!' முழு கோழியையும் சாப்பிட வேண்டும்; அதை மக்கள் பார்க்க வேண்டும். 'டீல்' சரியா... 'டவுட்' இல்லாமல் பதில் சொல்லுங்கள்!
பிரதமர் மோடி: நாட்டிற்கு சவாலாக இருக்கிறது வாரிசு அரசியல். அதை முற்றிலும் வேரறுக்க வேண்டும். வாரிசு அரசியல்வாதிகளுக்கு, தேசம் என்றும் முதன்மையாக இருந்தது இல்லை. அவர்களுக்கு, குடும்பத்தினரே முக்கியம். ஆனால் இப்போது, திறமைக்கும், நேர்மைக்கும், மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆனால், வாரிசு அரசியல் என்ற நோய் இன்னும் முற்றிலும் அழியவில்லை.
'டவுட்' தனபாலு: வாரிசு அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டது காங்கிரஸ் கட்சி. வாரிசு அரசியல் ஏற்படக் கூடாது என்பதற்காக தான், சுதந்திரம் வாங்கிய கையோடு கட்சியை கலைக்க, மகாத்மா காந்தி பரிந்துரைத்தார். அவர் பேச்சு எடுபடாமல் போனது. ரஜினி சொன்னது போல், 'சிஸ்டம்' மாறணும்ங்கறதுல, 'டவுட்' இல்லே!
பத்திரிகை செய்தி: மருத்துவ நிபுணர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 19 முதல், பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு, 25 மாணவர்களே இருப்பர். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'டவுட்' தனபாலு: முன்பெல்லாம், 'லீவு'க்கு ஏங்கிய மாணவர்கள், இப்போதெல்லாம், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்திருப்பர். பள்ளிகள் திறப்பு மாணவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE