பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமங்களில் வசிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஊராட்சி நிர்வாகத்தில் விண்ணப்பித்து, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடு கட்டலாம்.மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்ற நோக்கில், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள அரசு மானியம் வழங்குகிறது.மத்திய அரசு தொகையாக, 1.20 லட்சம் ரூபாய்; மாநில அரசின் மேற்கூரை நிதி, 50 ஆயிரம் ரூபாய்; தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 90 திறன் சாரா மனித சக்தி நாட்களுக்கு, 23,310 ரூபாய் மற்றும் தனிநபர் வீட்டு கழிவறை கட்ட, 12 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், இரண்டு லட்சத்து, 5,310 ரூபாய் வழங்கப்பட்டது.தற்போது, தமிழக அரசு மேற்கூரை நிதியை, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. தற்போது மொத்தம், இரண்டு லட்சத்து, 75,310 ரூபாய் மானியமாக பெறலாம். சொந்த இடப்பட்டா உள்ள, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, ஊராட்சியில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.பயனாளிகள், வீட்டு மனை பட்டா, வங்கி கணக்கு எண், தேசிய ஊரக வேலை உறுதி அட்டை எண் ஆகிய முழு விபரங்களை கொடுத்து, ஊராட்சி நிர்வாகத்தில் மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது, ஒன்றிய அலுவலகத்தை அணுகி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம், என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE