சூலுார்:ஆச்சான் குளத்துக்கு செல்லும் நீர் வழிப்பாதையில், இறந்த கோழிகளை வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.சூலுார் அடுத்த நீலம்பூரில் ஆச்சான்குளம் உள்ளது. குளத்துக்கு, காமாட்சிபுரம் நொய்யல் ஆற்றில் இருந்தும், நீர் வழிப்பாதையும், கோவை மாநகரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதுார், குளத்துார் வழியாக, நீர் வழிப்பாதையும் உள்ளது. இதன் வழியாக வரும் நீர் வாயிலாக ஆச்சான்குளத்தின் நீர் மட்டம் உயரும்.
பிரதானமாக, நொய்யல் ஆற்று நீரே அதிகளவில் குளத்துக்கு வரும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக நகரப்பகுதிகளில் பெய்த கனமழையால், அத்தப்பகவுண்டன்புதுார் நீர் வழிப்பாதையில் அதிகளவு மழை நீர் பெருக்கெடுத்து வந்தது. இதனால், ஆச்சான்குளத்தின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.இந்நிலையில், அத்தப்பகவுண்டன்புதுார் மயானம் அருகே செல்லும் ஆச்சான்குளம் நீர் வழிப்பாதையில், இறந்த கோழிகளை வீசி சென்றுள்ளனர். தேங்கி நிற்கும் மழைநீரில் மிதக்கும் கோழிகளால், சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது
.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:குளங்களுக்கு செல்லும் நீர் வழித்தடங்கள் ஏற்கனவே புதர் மண்டி கிடக்கின்றன. பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால், குளத்துக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.கனமழை பெய்ததால், மழைநீர் வருவது அதிகரித்தது. அந்த தண்ணீரில் இறந்த கோழிகளை வீசி சென்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுகள் மற்றும் இறந்த கோழிகளை வீசுவோரை, உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE