பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், இங்குள்ள கவுசிகா நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குருடிமலையில், சில ஓடைகள் மற்றும் சிற்றருவிகள் இணைந்து கவுசிகா நதி உற்பத்தியாகிறது. நரசிம்மநாயக்கன்பாளையத்திலிருந்து மேற்கே பூச்சியூர், ராவுத்துக் கொல்லனுார் வழியாக சென்று, பள்ளத்தை கடந்தால், சஞ்சிவீ பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு வலப்பக்கத்தில் மலையடிவாரத்தில் இருந்து, கவுசிகா நதி வரும் பாதையில் நடந்தால், சிற்றருவிகளை காணலாம். தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை நீர், கவுசிகா நதியில் வெள்ளமாக வழிந்தோடி வருகிறது. இது, ராவுத்துக்கொல்லனுார், தெக்குப்பாளையம், இடிகரை, அத்திபாளையம் வழியாக நீண்டதுாரம் பயணம் செய்து, சுல்தான் பேட்டை அருகில் நொய்யலில் கலக்கிறது.ஒரு காலத்தில், கோவை வடக்கு பகுதியில் நிலத்தடி நீர் பெருக, ஆதாரமாக விளங்கிய கவுசிகா நதி தற்போது, சிறு ஓடையாக சுருங்கி விட்டது. தற்போது மலையடிவாரத்தில் கவுசிகா நதியில் பெருகி வரும் நீர், பராமரிப்பு இல்லாத கவுசிகா நதியை கடந்து, இடிகரை கூட செல்லா முடியாத பரிதாபம் உள்ளது. கவுசிகா நதியின் ஆக்கிரமிப்பை அகற்றி, தடுப்பணை கட்டி பராமரித்தால் மட்டுமே நதியை காப்பாற்ற முடியும். ராவுத்துக்கொல்லனுார் சஞ்சீவி பண்ணாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர், இச்சிற்றருவிகளை கண்டு மகிழ்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE