அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், கிராம விழிப்புணர்வு காவலர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றங்கள் குறையும்என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு காவல்துறை சார்பில், கிராம விழிப்புணர்வு காவலர் திட்டம் என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் படி, அனைத்து மாநகர் மற்றும் மாவட்டங்களில், ஒவ்வொரு தாய் கிராமத்தையும், அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தி கவனிக்க வேண்டும்.திட்டம், கடந்த வாரம் அமலுக்கு வந்தது. அன்னூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ள, 22 தாய் கிராமங்கள், அவற்றில் அடங்கிய, 144 குக்கிராமங்களுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.அன்னூர் பேரூராட்சிக்கு சிறப்பு எஸ்.ஐ., முருகேசன் (94981 74275) நியமிக்கப்பட்டு உள்ளார். ஒட்டர்பாளையம், குப்பனுார், கணுவக்கரை, ஆம்போதி, அக்கரைசெங்கபள்ளி, வடக்கலுார், அ.மேட்டுப்பாளையம், பசூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, சொக்கம்பாளையம், பிள்ளையப்பம் பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், செந்தாம்பாளையம், நாரணாபுரம், பச்சாபாளையம், கரியாம்பாளையம், குன்னத்தூர், காட்டம்பட்டி, குப்பேபாளையம், காரே கவுண்டம்பாளையம் ஆகிய 22 தாய் கிராமங்களுக்கும், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.வாட்ஸ் ஆப் குரூப்அன்னுார் போலீசார் கூறியதாவது: கிராமங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசார், வாரத்துக்கு இரண்டு முறை அந்த கிராமத்தில் முழுமையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு கிராமத்துக்கும் என தனியாக 'வாட்ஸ் ஆப்' குரூப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், அந்த ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், சமூக ஆர்வலர்கள் உட்பட, குறைந்தபட்சம், 50 பேரை அந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட தாய் கிராமத்துக்கு உட்பட்ட குக்கிராமங்களில் நடக்கும் முக்கியமான திருவிழாக்கள், நிகழ்வுகள், சந்தேகத்திற்குரிய விஷயங்கள் என, அனைத்தையும் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, அந்த கிராமத்துக்கு பொறுப்பான போலீசார் குற்றத்தடுப்பு நடவடிக்கை ஈடுபடவும், குற்றங்களை கண்டுபிடிக்கவும், சட்டம் -ஒழுங்கை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். மேலும், அந்த கிராமத்துக்கு நியமிக்கப்பட்ட போலீசார், அந்த பகுதியில், பொதுமக்களுடன் நட்புறவுடன் பழகி, குற்றத்தடுப்பு பணி குறித்து தகவல்களை பரிமாறிக் கொள்வர். இதன் வாயிலாக குற்ற தடுப்பு நடவடிக்கை சாத்தியமாகும்.கண்காணிப்பு கேமராபல மாநகரங்களில் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, 22 தாய் கிராமங்களிலும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே, 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள், குற்ற கண்டுபிடிப்பு நடவடிக்கையில், 50 சதவீத சம்பவங்களில் உதவியாக உள்ளன. திட்டம் துவக்கப்பட்ட, 4 நாட்களில், 500 பேர், கிராம விழிப்புணர்வு காவலர் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்துள்ளனர்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE