உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ஆதரித்து, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட, காங்., கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், அதில் பங்கேற்கவில்லை. வி.சி., தலைவர் திருமாவளவன் இடையிலே கழன்றுச் சென்று விட்டார். தி.மு.க., - எம்.பி., ஒருவர் நைசாக, டிபன் சாப்பிட கிளம்பியிருக்கிறார்.
இந்த உண்ணாவிரதம், விவசாயிகளை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம் என்பது, வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. கடந்த, 2009, ஏப்., 27ல், 'இலங்கையில் நடந்துவரும் இன அழிப்பு போரை, மத்திய அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்; இல்லையேல், இலங்கை தமிழருக்காக, என்னுயிரை விடப் போகிறேன்' என்று சூளுரைத்து, மெரினா கடற்கரையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அடுத்த சில மணி நேரத்தில், 'இலங்கையில் போர் நின்று விட்டது' என அறிவித்து, தானாகவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அவரின் இந்த, 'அரிய சாதனை'யை பார்த்து, நாடே வியந்து, 'பாராட்டியதை' மறக்க முடியுமா? நம் நாட்டின் விடுதலைக்காக, தீண்டாமைக்கு எதிராக, மத நல்லிணக்கத்துக்காக மகாத்மா காந்தி, தன் வாழ்நாளில், 17 முறை, மொத்தம், 139 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.இதில், மூன்று முறை, தொடர்ந்து, 21 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து போராடியிருக்கிறார்.

தமிழகத்தில், உண்ணாவிரத போராட்டம் என்றாலே நினைவுக்கு வருபவர், தியாகி சங்கரலிங்கனார் தான். அவர், 'மது விலக்கு வேண்டும், சென்னை மாகாணத்தை, தமிழகம் என்று பெயர் மாற்றம் வேண்டும்' என்பது உட்பட, 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து, விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்தார். கடந்த, 1956 ஜூலை, 27ல் துவங்கிய உண்ணாவிரத போராட்டம், 76 நாட்கள் நீடித்து, அக்., 13ல் நிறைவுற்றது. ஆனால், இறுதி நாளன்று அவரது உயிரும் பிரிந்தது.உண்ணாவிரத போராட்டத்தால், உயிரை இழந்த உண்மையான தமிழ்த் தியாகி சங்கரலிங்கனார் தான்.
மகாத்மா காந்தி போன்ற உத்தமர்கள், அன்னியரை எதிர்த்து அறவழியில் போராடுவதற்காக பயன்படுத்திய புனிதமான ஆயுதம் தான், உண்ணாவிரத போராட்டம். ஆயுதங்களை துாக்கிய ஆங்கிலேயர், அகிம்சை போராட்டத்தைக் கண்டு பிரமித்தனர்; பின்வாங்கினர். இன்றைய அரசியல்வாதிகள் விளம்பரத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும், 'உண்ணாவிரதம்' என்ற பெயரில் நாடகமாடுகின்றனர்.
விவசாயிகள், இவர்களது வலையில் வீழ்ந்து விடக் கூடாது. அவர்களது போராட்டத்தில் உண்மை இருந்தால், சாகும் வரை உண்ணாவிரதம் என, களமிறங்கட்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE