பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் சதம் கடந்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் உள்ளது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கிக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ் தேர்வானார். இந்திய அணியில் ஹனுமா விஹாரி, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், பும்ராவுக்கு பதிலாக மயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நடராஜன் இடம் பிடித்தனர். இதில் தமிழகத்தின் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுகமாகினர்.

‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், ‛பேட்டிங்' தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (1), மார்கஸ் ஹாரிஸ் (5) ஜோடி ஏமாற்றியது. பின் இணைந்த மார்னஸ் லபுசேன், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடியது. மூன்றாவது விக்கெட்டக்கு 70 ரன் சேர்த்த போது வாஷிங்டன் சுந்தர் ‛சுழலில்' ஸ்மித் (36) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய லபுசேன் சதம் கடந்தார். நடராஜன் ‛வேகத்தில்' மாத்யூ வேட் (45), லபுசேன் (108) அவுட்டாகினர். பின் இணைந்த கேப்டன் டிம் பெய்ன், கேமரான் கிரீன் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 274 ரன் எடுத்திருந்தது. கேமரான் கிரீன் (28), கேப்டன் டிம் பெய்ன் (38) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் நடராஜன் 2, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE