புதுடில்லி: டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் இடையிலான, ஒன்பதாம் சுற்று பேச்சிலும் முடிவு எட்டப்படவில்லை. வரும், 19ல், மீண்டும் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்திய, மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக, டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு -- விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே, எட்டு சுற்று பேச்சு நடந்தது. புதிய சட்டத்தில் திருத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒன்பதாம் சுற்று
ஆனால், 'புதிய சட்டங்களை மொத்தமாக திரும்ப பெற்றால் மட்டுமே, போராட்டம் முடிவுக்கு வரும்' என, விவசாய சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்ததால், சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், ஒன்பதாம் சுற்று பேச்சு, நேற்று நடந்தது. மத்திய அரசு தரப்பில், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஐந்து மணி நேரம் நடந்த கூட்டத்தில், 'புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம்' என்ற கோரிக்கையில், விவசாய சங்கத்தினர் உறுதியாக நின்றனர்.
மத்திய அரசு தரப்பினர், அவர்களை சமாதானப்படுத்த முயன்றும், பலன் அளிக்காததால், 10வது சுற்று பேச்சை, வரும், 19ம் தேதி நடத்த, இரு தரப்பினரும் சம்மதித்தனர்.
நம்பிக்கை
கூட்டம் முடிவடைந்த பின், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:விவசாய சங்க பிரதிநிதிகளுடனான ஒன்பதாம் சுற்று பேச்சு, சுமுகமாக நடந்தது. சில பிரச்னைகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டன. ஆனால், சுமுக தீர்வை எட்ட முடியவில்லை. வரும், 19ல் நடக்கும் அடுத்த சுற்று பேச்சில், சுமுக தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
வேளாண் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்களின் உதவியுடன், புதிய சட்டங்களில், எந்தெந்த பிரிவுகளில் பிரச்னைகள் உள்ளன, அதில் விவசாயிகள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை, அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கும்படி, சங்க பிரதிநிதிகளிடம் கூறியுள்ளோம்.
அவற்றை சரி செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய அரசுடன் நேரடி பேச்சு நடத்த விவசாயிகள் விரும்புகின்றனர். அதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
அதே நேரம், விவசாயிகளின் நலனுக்காகவே, உச்ச நீதிமன்ற குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. பேச்சு வாயிலாக, போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதே, மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு, அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
'விவசாயிகளுக்காக குரல் கொடுப்போம்' என்ற பெயரில், அனைத்து மாநில கவர்னர் இல்லங்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, காங்கிரஸ் அறிவித்துஇருந்தது.அதன்படி, டில்லி துணை நிலை கவர்னர், அனில் பைஜாலின் இல்லமான, ராஜ் நிவாஸ் நோக்கி, பேரணியாக செல்ல காங்., கட்சியினர் நேற்று முயன்றனர்.
பாதி வழியிலேயே, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன்பின் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிடட்ட காங்., தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, ராகுல் பேசியதாவது:வேளாண் சட்டங்களை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இச்சட்டங்களை திரும்பப் பெறும் வரையில், காங்கிரசும் ஓயப்போவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையையே, இந்த சட்டங்கள், முடித்து வைத்துவிடும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE